மந்திரப் புன்னகை- சிறுகதை- கவிஜி

"என்ன சார்.... இன்னைக்கும் லேட்டா...."

இந்த கேள்வி அவனைத் துரத்த ஆரம்பித்து ஒரு மாதம் ஆகி விட்டது. அவனுக்கு புதிர் பிடிக்கும்தான்....ஆனாலும் இது புரியவே முடியாத புதிராக இருப்பதை ஏனோ... அச்சத்தோடு பார்க்க வேண்டி இருந்தது. வளைவுகள் நிமித்தம் வாழ்க்கையின் நிமிடங்களை அவன்... பெருங்கண் கொண்டே காண்கிறான்....கண்டான். மனதுக்குள் ரீங்காமிடும்... இந்த பூமியின் அநியாயங்களின் கூற்றில் அவன் தினம் தினம் குத்தப்பட்டு கலைக்கப்படுவதை அவன், தன் தனிமையின் பொருட்டு ஒளித்து வைப்பதில்லை. போட்டு உடைக்கும் வானக்காட்டு திறவாகவே அவனது கோபம்... தெறித்து வீழ்கிறது வெளிமீன் சாவுகளாகவும்.

ஆம்.... என்பதை ஆம் இல்லை என்பதாக தலையாட்டிக் கொண்டு நடந்தான் யுத்தன்.

அவன் மனதுக்குள்....ஓடிய எல்லா கேள்விகளையும் மீண்டும் மீண்டும் பதிலாக்கும் நிரந்தரத் தன்மை ஒன்றை அவன் அவனுக்காகவே செய்து கொண்டு நிரம்பி தவித்தான். தவிக்கையில்.... நின்று விளையாடும் தன்வினை எதிர் நின்று தனையே ஆட்டுவிக்கும் என்பதில்... புரிதல்கள் அப்படியே தான்.

"என்ன நடக்கிறது... என்னை சுற்றி.......?"
"ஏன் நடக்கறது என்னை சுற்றி.......?"
"எதற்கு நடக்க வேண்டும் என்னை சுற்றி.......?" என்று, எதுகை மோனை தொடர்பற்ற சிந்தனையாக தொக்கி எக்கி சேர்ந்து கொண்டே இருந்தது. அவன் கன்னிகள் வெடிக்காமல்... உயிர் குத்தும் சோலைக் காடுகளின் தூரத்தை அவனைப் போலவே வரைந்து கொண்டிருந்தது.

எத்தனை தவறான ஆயுதம் இந்த மனிதன் மனம். காதல் என்ற போர்வையில் வளர்ந்து விருட்சமாகி... விஷமாக மாறி, கத்தி கொண்டு அத்தனை பேர் பார்க்க...... ஒரு பெண்ணை வெட்டி சாய்க்க தூண்டி இருக்கிறது. தூண்டில் இட்டிருக்கிறது!

எங்கே ஆரம்பித்தது.... இத்தனை வக்கிரம். இத்தனை வியூகம். இத்தனை மூர்க்கம். இது மானுட பிழையா? அல்லது காலத்தின் வலையா? என்ற கேள்வியினூடாகவே அவனின் அன்றைய விடியல் தொடங்கியது. எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பியவனின்... வண்டி ஊர் மேய்ந்து கொண்டு வரும்.. கழுதையைப் போல காரணத்தோடு காரணமே இன்றி உயிர் உருட்டிக் கொண்டு அலுவலகம் நோக்கி நகர்ந்தது வழக்கம் போல. மனதுக்குள் அசைபோடும் கழுதையின் பசிக்குள்......எங்கு திரும்பினும் கொலை.. கொள்ளை... தனிமனித ஒழுக்கமின்மை... துரோகம்.. ஏமாற்று.. காசுக்கு கொலை.. காதலுக்கு கொலை....கள்ளத்தனத்துக்கு கொலை... பதவிக்கு கொலை....பாதகத்துக்கு கொலை... பசிக்கு கொலை.. பட்டினிக்கு கொலை. பார்க்கும் இடமெல்லாம் ரத்தம் சொட்டும் வாடையை சகிக்கவே முடியாத கூர் நாசியில்....அவன் சுழித்துக் கொண்டே வரும் போது மணி 10ஐ நெருங்கி விட்டிருக்க, அலுவக மேலாளர் முன் காரணமே புரியாமல் கை காட்டாத குறையா நிற்கும் நிலையில்.. அவனின் மூளை விரிவடைந்து விரிவடைந்து பெருமூச்சை உற்பத்தி செய்து கொண்டிருந்தது அன்றும்.

"யுத்தன்.... கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வரலாம்ல..? ஏன் தினமும் இப்டி லேட்டா வந்து திட்டு வாங்கறிங்க..."- உடன் பணிபுரியும்.. மொக்கை மனிதன்... வழக்கம் போல... பேசிக் கொண்டே வடை சாப்பிட...அவனை அர்த்தத்தோடு பார்த்து விட்டு வாய்க்குள்ளேயே முனகினான்.

"மஞ்ச லைட்டு போட்டப்புறமும் வண்டிய நிறுத்தாம போற கழுதையெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணுது" -மனதுக்குள் எடுத்த கல்லால் மொக்கை மனிதனை அடித்தான். ஆசை தீரவேயில்லை. யோசித்துக் கொண்டே திரும்புகையில் அகலிகை பார்த்து சிரித்தாள். மனதுக்குள் குயில் பாடும் தென்றல் கலந்த ஓசை சட்டென அருவியாக கொட்ட அவளை அர்த்தமின்றியும் பார்த்தான்....பேச வேண்டும் என்பது போலவும்.

அன்று மதியத்தில்...கேண்டீனில் இருவரும் எதிர் எதிர் அமர்ந்திருந்தார்கள்.

****

பரந்த மலை

தொட்டு தொடரும் காற்றில் பட்டு படரும் மென்மை. சூரியனின் சொற்கள் கற்களில் விழாத கணத்தை எல்லாம் புல்வெளிகளாக்கி அதீத ஞாபகத்தின் அற்புத ஆதியில் அந்த காடும் மலையும் சுவீகரித்திருக்க, யுத்தன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அவனை சுற்றிலும் மேய்ந்து கொண்டிருந்த அத்தனை ஆடுகளும் அவன் வசம். அத்தனை ஆடுகளிலும் அவன் வாசம். கால் முளைத்த பறவைகளாகி அவன் பூமியை நிரப்பி இருக்க....அவன் தாடியும் பின்கழுத்து தாண்டி புரளும் கூந்தலுமாக ஒரு கடவுளை போல, மலை மேல் அமர்ந்திருந்த ஒரு செங்குத்துப் பாறையில் வீற்றிருந்தான். ஒளி வீசும் கண்களில்.... அஹிம்சை தேகத்தில்... அவன் அப்படி இருப்பது.... தெய்வீக ஓவியத்தின் சிதறலைப் போல.. வெளியில்.. வரைந்து கொண்டே இருந்தது.... பார்க்கும் ஒவ்வொரு கண்களும்.

ஏவா... எப்போதும் போல அவனிடம் குறும்பு செய்ய மறைந்திருந்தாள். மொத்த காதலையும்... நித்தம் சிரிப்பாக்கி... அவன் முன்னால் சிரித்து சிரித்து கண்களில் கவிதை நெரித்து காற்றினில் கனவு குழைத்து அவனை சுற்றி படர விடுகிறாள். அன்றும் விட்டாள். அது கான திறவின்... அற்புத ஆப்பிளின் சுவை கூட்டும் வளமை. இப்படியாகத்தான் யுத்தனின் ஆடு மேய்க்கும் நிகழ்வு சரித்திரத்தின் குவிதலை உள் வாங்கும் காலச் சுழலாக சுழன்று கொண்டிருந்தது. மேடைகள் காடாக... காட்சிகள் திரைக்கதைக்குள்.... கதை சொல்லும்.. சூத்திரம் வாய்க்க ப்பட்ட அற்புதங்கள்... அவர்களாக அரங்கேறிக் கொண்டிருந்தது.

ஆடு மேய்த்தலும் சவப்பெட்டி செய்வதும் யுத்தனின் தொழிலாக இருந்தது. அவன் ஆடுகள் மேய்க்கும் போது சந்தோசமாக இருந்தான். சவப்பெட்டிகள் செய்யும் போது சவமாய் இருந்தான். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே அவன் ஒரு நதியை போல மிதந்து கொண்டிருந்தான்.... இயற்கையின் கையில்... அவன் தினம் ஒரு கடவுளை செய்து கொண்டிருந்தான். மூர்க்கத்தின் திறவுகோலை ஒரு மரணம் கொள்ளும் நாளில் மற்றவரின் கண்ணீருக்கு ஆணிகளை அவன் விரல்களில் தரித்து கொண்டிருந்தான். துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அவன் உலகில் இல்லை. வெறும் உடல் ஒரு போதும் அவனை திருப்தி படுத்துவதேயில்லை. உயிர் தேடி அலையும் அவனின் ஆன்மா மற்றவருக்காக போராடியது. சக உயிரை மதித்து புன்னகைக்கும் நல்ல மனதில்.... அவன்.... ஆயிரம், லட்சம், கோடி கடவுள் துகள்களால் ஆக்கப்பட்டவனோ.... என்று நம்பாத் தோன்றும்.. மிகப் பெரிய நம்பிக்கையின் விதையானான். அன்பின் வாசலில் அவன் திறந்து கொண்டே இருந்தது, இன்னும் இன்னும் அழகிய உலகங்கள் மட்டுமே. மறுகன்னத்திலும் முத்தமிட்ட காதலோடுதான் அவன் சவப்பெட்டிகள் கூட செய்தான்.

துக்கத்தின் ஈர்ப்பு விசையை அவனிடமே கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தது அதுவாகவும் அந்த ஆதிக்காடு. அவன் மற்றவர்களுக்காகவே வாழ்பவன் ஆன பொழுதொன்றில்தான் ஏவா, மனதை கொடுத்து, மறைந்து நின்று அவனை ரசிக்கவும் துவங்கினாள். அவளின் காடு விட்டு இவன் காட்டுக்குள் அவளின் பிரவேசம் புது அக்னி பிரவேசத்தை நினைவூட்டியது. படைத்தவன் மீதே கொள்ளும் அன்பு போல படைப்பாளி யுத்தன் மீது மெல்ல காதலாகி காமமாகி அவன் பொருட்டே உலகை சுற்ற விடும் தலைகீழ் விகிதமென ஏவாவின் கண்கள்... புது சர்ப்பம் படைத்தன.

****

அவனின் வேகம்... காலையில்... பறவையைப் போன்றது. பொருள் தேடும் உயிருக்கே இவ்வுலகம் சொந்தம் என்ற மாய தத்துவத்தில் வேறு வழியின்றி மாய்ந்து மாய்ந்து கணிப்பொறி காண்பவன்தான் அவன். பச்சைக்கு காத்திருக்கும்... மஞ்சள் வனத்தில்... மிகக் கவனமாக மணி பிறழாமல் நின்று வானம் பார்ப்பான். சூரியனின் சுளீர் எறும்புக் கடிகளை முகம்...கைகளில்....முடிந்தால்....கொஞ்சம்...கழுத்துக்கும்...வாங்கிக் கொண்டு திரும்புகையில்....மஞ்சளை சிவப்பென கடந்து...."முட்டாள்" என்று சிக்னல் காவலரிடம் திட்டு வாங்கிக் கொண்டு வேகமாய் அவனைக் கடக்கும் மொக்கை மனிதர்களை அவனும் அவன் பங்குக்கு திட்டுவது உண்டு. அம்பியைப் போல.... எல்லாவற்றுக்கும் சரி பார்க்கும்.. ஒரு நல்லவனின் வாழ்வை சுமந்து கொண்டிருந்தான். தவறுகள் இல்லாத அன்பின் தேசமாக இந்த உலகம் மாற வேண்டும் என்று பேராசை கொண்ட நவீன புத்தன் இந்த யுத்தன்.

கைக்கடிகாரம் 8.30ஜக் காட்டும். மீறினால்....இன்னும் பத்து நிமிடங்களில் அவன் அலுவலகம் சென்று விட முடியும். அவன் கிளம்பி செல்ல தொடங்கினான். ஆனால் அலுவலக வாசலை தொடும் போது.....அவனை எல்லோரும் ஒரு மாதிரி பார்த்து......"என்ன யுத்தன்... பெர்மிஷனா...? அடிக்கடி பெர்மிஷன்....ம்ம்ம்....."என்று கூறி பதிலுக்கு காத்திராத உடன் பணிபுரிபவர்கள் கடந்து போகையில்... கொஞ்சம் வினோதமாக பார்த்தபடியே கடிகாரத்தைப் பார்க்க....தூக்கி வாரிப் போட்டது. மணி 10.30.

பட்டென அலைபேசியை எடுத்து.. மணி பார்த்தால், அதுவும் அதையே காட்ட.... உள்ளே ஓடி சென்று அலுவக சுவர் கடிகாரத்தை பார்க்க அதுவும் அதையே காட்டியது. தலை சுற்றுவது போல இருந்தது. ஒரு முறை சுற்றிய தலைக்கு பின் எல்லாமும் சுற்றுவதாக தோன்றியது.... இன்னும் வேகமாக.

"என்ன நடக்கிறது.. எங்கு சென்றேன்.. என் நினைவுகள் எங்கே.. நான் என்னை விட்டு அவ்வப்போது வெளியேறி விடும்... மறதிக்குள் நியாயமென எனது தூரம்.. என்னை ஏதோ செய்துகிறது..." புலம்பத் தொடங்கினான். தனிமையில் சுழன்று அமரத்தொடங்கினான். அமர்கையில் ஊர் சுற்றும் நினைவுகளை கட்டிப் போட்டு விட துடிக்கும் அதிர்வுகளை அவ்விதம் முடியாமல் மூளைக்குள் மூளை முளைப்பதாக நம்பினான்.

அலுவலகத்தில் எல்லாரும் கேட்டு திட்டும் அளவுக்கு வந்து விட்டது. அவன் தாமதமாக வருவது அதிகமானதே தவிர குறையவில்லை. யாரும் அவனை நம்பாத தயாராக இல்லை. அவனும் நம்பத் தகுந்த எதையும் கூறவில்லை. ஒன்று அவனுக்கு மறதி நோய். அல்லது மன நோய்.

அவன் இரண்டும் இல்லை என்கிறான். ஆனால் குழம்பித் தவித்தான். எத்தனை யோசித்தும் வராத கவிதையைப் போல... தலைகீழ் விதி ஒன்றை நேருக்கு நேர் நின்று பின் பக்கமாக்கினான்.

வாழப் பழக் கதை மாதிரி...அவன் வாழ்வின் கதையும் வெடித்து சிரித்தது.

"எத்தனை மணிக்கு கிளம்பின..."

"எட்டுக்கு...."

"எந்த வழியா வந்த...."

"ஜிபி வழியா...."

"ஆபிஸ் எவ்ளோ தூரம்....?"

"வீட்ல இருந்து பத்து கிலோ மீட்டர்..."

"எதுல வந்த....?"

"பைக்ல...."

"பைக்ல வர எவ்ளோ நேரமாகும்.....?"

"அதிகபட்சம் முக்கால் மணி நேரம்...."

"நீ வர எவ்ளோ நேரம் ஆச்சு..?"

"முந்தா நேத்து பத்து மணி... நேத்து பத்தரை.....இன்னைக்கு...பதினொன்னு."

"ஏதாது எஸ்பிரிமெண்ட் ஏதும் பண்றயாடா...?"

"போங்கடா.....! நான் சரியாத்தான் வந்துட்டு இருக்கேன்.. ஆனா என்னமோ லேட் ஆகிடுது..."

"அடேய்...."ன்னு கத்தி ஓடி ஒளிந்தவர்கள் ஏராளம்.

"என்ன நடக்குது.... யுத்தன்... டாக்டரை பாக்கலாமா...." என்றவர் சிலர்.

"பாக்க போனேன்... ஆனா அவர் குடுத்த அப்பாயிண்ட்மெண்ட் சாயந்தரம் ஏழு மணிக்கு.....நான் போகும் போது மணி 9 ஆகிடுச்சு" என்று சொல்லி கண்கள் உருட்டினான். கலகலவென சிரித்தவர்கள் பலர். கலாய்ப்பதற்காகவே சிரித்தவர்கள் பலர்.

இன்றும் யோசனையோடு அமர்ந்திருக்கிறான். அகலிகை... போன வாரம்தான் வேலைக்கு சேர்ந்திருந்தாள். ஏனோ இவனோடு பேசுவதற்கு.... பழகுவதற்காக வந்தவள் போலவே.. அவனோடு ஒட்டிக் கொண்டாள். தட்ட தட்ட கிடைக்கும்.... தட்டியது போல.. அவளின் பார்வையில் ஊற்றெடுத்து அருவியாகும் அன்பு அவனுக்கு இப்போது மட்டும் அல்ல எப்போதும் வேண்டும் என்று தோன்றியது.

****

ஆம்.... ஏவா யுத்தனையே சுற்றினாள். அப்படித்தான் பூமி சுற்றுவதாக நம்பினாள். தலை விரி கோலமாய் காதலை அள்ளி அள்ளி வீசினாள். யுத்தன்.. யாவும் அறிந்தவன். மென்மைக்குள் மேன்மை சுமப்பவன். அவளின் இலைமறைகாய் காதலை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தள்ளி வைத்தான். தவறு என்றான். படைத்தவன் மீதே கொள்ளும் காதலைப் போல.. இது இயல்புக்கு மீறிய நடத்தை என்றான். அவளின் அவனுக்கு செய்யும் துரோகம் என்றான்.

"என் காதலை முடிவு செய்ய நீ யாராக இருந்தாலும் எனக்கென்ன" என்றாள் ஏவா. உடனுக்குடன் எதிர் வினை ஆற்றும் பெண்ணின் ஆழம்.. காண முடியாதது என்று நிரூபிக்கும் முதல் சந்தர்ப்பத்தை எதிர்கொண்டாள். பெண் திமிரில் ஆதி அழுத்தம் தலை தாண்டிய வானமாய் கவிழ்ந்து பெரும் கூற்றை சுக்குநூறாக லட்சப் பொடியாக உடைத்துக் கொண்டிருந்தது. இரவுகளில் அவன் சவப்பெட்டியை அழுதுகொண்டே செய்யும் தனிமையை ஆக்கிரமிக்கும் அரவணைப்பில் நிழல் என ஒரு மாயத்தைப் போல மறைந்தும் கரைந்து அவனோடு சேர்ந்து காரணமே இல்லாமல் அவளும் அழுதாள். யாவுமே அறிந்த யுத்த மனம் விதியின் கோட்டில்... ஆணி அடித்துக் கொண்டே இருந்தது. பகலை ஆடுகளால் நிரப்பிக் கொண்டே தலை முடி காற்றில் அலையாகி பறக்க.. பொன்னிற தாடி.... கள்ளமில்லா சிரிப்பை.. யுத்தனின் வெளி சிலையைப் போல ஞாபகக் குறியீட்டைப் பதித்துக் கொண்டே நகர்ந்தது. காலம் நகர காதலின் தீரா வியாதியில் கட்டுண்ட ஏவா... அவளின் காடுகளை மறந்து போனாள். யுத்தனை சுமந்த மனது சர்ப்பத்தின் சிறகில்... யுத்தனை சுற்றியே இனம் புரியா யுத்தம் செய்து கொண்டிருந்தது. காலத்தின் கதவுகள் திறந்து கொண்டே இருந்தன. ஜன்னல்கள் அடித்துக் கொண்டன. நகரும் பாதங்களின் சுற்றுவட்டம் மீண்டும் மீண்டும்... வட்டமிட்டு கழுகைப் போல ஒரு புள்ளியில் குவியத் தொடங்கின. முதலின் முடிவில் முதலே முடிவாக இருப்பதாக முடிவே மீண்டும் முதலாகும் தத்துவத்தை யாரும் உருவாக்கவே இல்லை. ஆதலால் அது அதுவாகும் நியாயத்தை எடுத்துக் கொண்டது.

அப்படியாகப்பட்ட வேளையில்....முப்பதை தொட்ட ஒரு அதிகாலையில் ஆடு மேய்ப்பதை விட்டு விட்டு வேறு வேலை இருப்பதாக சொல்லி ஊர் ஊராக செல்லத்துவங்கினான் யுத்தன்.

காரணம், அது அப்படித்தான் என்றான்.

இதுநாள் வரை தனக்குள் கொண்ட தீரா அன்பை அவன் போதிக்கத் துவங்கினான். அது மட்டுமே இந்த உலகின் போக்கை திசை மாற்றும் என்று நம்பினான். கை மீறிய உலகை சரி செய்ய வேளை வந்து விட்டதாக பேசினான். நிஜத்தை ஊரறியும் செவியில்.... அன்போடு... பேரமைதியோடு தான் உணர்ந்ததை.... உணரப் போவதை....ஊற்றினான்.

"இந்தக் காதலின் ஏக்கத்தை என்னவென்று கூறுவேன்... உன் ஒளி படைத்த கண்களுக்குள் நான் சிறு நதியாகி நீந்துவது உனக்கு தெரியவில்லையா?" என்று புலம்பினாள் ஏவா. தன் படைப்பின் சூத்திரம் அவனாலேதான் அவிழ்க்கப் படும் என்று அவள் உலகம் தட்டிக் கொண்டிருப்பதாக அழுதாள். கேட்டால் தர முடியாத இடத்திலா என் காதல் இருக்கிறது என்று சாடினாள். ஊருக்கே தரும் அன்பை தனக்கு மட்டும் தராமல் போவதை கண்டிப்பதாக சொல்லி மண்டியிட்டு பாதம் தொட்டு முத்தமிட்டு தன் கண்ணீரால் யுத்தனின் பாதங்களை நனைத்தாள். பெண்ணின் காதலில் சற்று கூடுதல் காதல் இருப்பது அப்போதுதான் தோன்றி இருக்க வேண்டும். அவள் தோன்றியதே அவனோடு வாழத்தான் என்பது தனிமையுடைமையாகவே இருந்தாலும் தன் உடைமை என்று வாதிட்டாள். உடமைகளாலே உயிர் இருக்கிறது... என்பது பழையதில் புதியது.

ஏவா அறிவுரைகளால் நிறைந்து வழிந்தாலும்... வழியும் சிற்பத்தின் காரணங்கள் யுத்தனாகவே இருந்தன.

உள் வாங்கிய உணர்வுகளால் மெல்ல விழி திறந்த யுத்தன்...எல்லாம் அறிந்து கொண்டதாக தேஜஸ் நிரம்பி வழிய தன் தேகம் ஆணி அடிக்கப்பட்டு மரிக்கப் போவதாகவும் ஆன்மா தவத்தின் நிலை நோக்கி பயணிக்க இருப்பதாகவும் ஏவாளிடம் முன்கூட்டியே கூறினான். ஏனோ கூறத் தோன்றியது அந்த இரவில். அவன் தனிமையில் அழுதான். கூட இருக்கும் தோழன்... தன்னை யாரென்று தெரியாதென்று கூறி கடந்து போவதுதான் விதி என்றான். கூட இருக்கும் இன்னொரு தோழன்... தன்னை காட்டிக் கொடுப்பது எழுதப்பட்டது என்றான்.

ஏவா.. நிலை குலைந்து நின்றாள். என்ன நடக்கிறது... யாரிவன்..?! நேற்றுவரை ஆடுதானே மேய்த்துக் கொண்டிருந்தான். இன்று இவன் தொட்டால்... நோய் குணமடைகிறது. தீர்க்கத்தின் பிள்ளையைப் போல அத்தனை பரிசுத்தமாக...ஒரு மின்னலைப் போல கண்களைக் கொண்டிருக்கிறான்... இவன் எதற்கு சாக வேண்டும் என்று யோசித்தாள். தன் காதலுக்காக மட்டும் அல்ல. இந்த மூன்று வருடங்களில் எத்தனை எத்தனை உயிர்களை பாவத்தில் இருந்தும், மரணத்தில் இருந்தும் ஓர் அன்னையைப் போல காத்து மீட்டெடுத்திருக்கிறான். இவன் எதற்கு சாக வேண்டும்? கூடாது. சாகவே கூடாது. இவனின் சேவை இந்த பூமிக்கு தேவை. இவன் இன்னும் நூறாண்டுகள் வாழ வேண்டும்.. இந்த பூமி புண்ணியம் பெற... பாவம் நீங்க.. அதிகார வர்க்கத்திடமிருந்து ஏழைகளும்... உழைப்பாளிகளும் சுதந்திரம் பெற....நல்லவைகள் மீண்டெழ...தீயவை அழிய இவன் வாழ வேண்டும். இவன் சாகப் பிறந்தவன் அல்ல.. இவன் இந்த பூமியை சுத்திகரிக்க வந்தவன். ஆக இவன் சாக கூடாது...என புலம்பியபடியே அவள் அழுது கொண்டே மறைந்து நின்று யுத்தனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த பின்னிரவு வெளியிலும் அவனின் கண்ணீர் ஒரு காட்டின் அருவியைப் போல.. தானாக தனிமையின் திறத்தலோடு.... வீழ்தலின் இயலாமையை சேர்க்கும் பொருட்டு தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருப்பதாகக் கண்டாள். விடிந்தால்...... கதை மாறும் என்று முடிவெடுத்தவள் காற்றோடு யுத்தனை அணைத்துக் கொண்டிருந்தாள். அது அவனுக்கு தேவை என்று மானசீகமாக நம்பினாள்.

****

நாட்கள் நகர நகர... நேரம் அவனுக்கு தாமதமாகிக் கொண்டிருந்தது.

காலை... மதியம் ஆனது. மதியம் மாலை ஆனது. இரவு காலை ஆனது. நாள் வாரமானது. வாரம் மாதமானது. மாதம் வருடமானது. 2000மாவது வருடம் என்று கையொப்பம் இடும் அளவுக்கு அவன் பின்னோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவனை சுற்றி இருந்தவர்கள் பித்து பிடித்தது போல அவனைப் பார்த்தார்கள். சிரிப்பு மெல்ல அடங்கி சீரிய சிந்தனைக்குள் நுழைந்தது அவனின் செயல். அவள் மட்டும்தான் அவனை காதலோடு கண்டாள். அவனின் ஞாபக குறியீடுகள் எனவும்.....மறதியின் திரும்பல்கள் எனவும் வேறு வேறு விதங்களில் அவனிடம் புரிய வைத்துக் கொண்டிருந்தாள். நிஜத்தின் வேர்தன்னை நிழலாகி தெளிய வைத்துக் கொண்டிருந்தாள். எல்லாக் காரியங்களும்... காரணத்தின் விளிம்பில் நிறமற்றுதான் நிர்வாணம் சுமக்கும் என்று அவன் பிதற்றினான். சாத்தானை கொல்லப் போகும் ஆதிக் காட்டின் எல்லா கதவுகளையும்.... திறந்து வைத்துக் கொண்டு... கையில்... கோடாரியுடன் வெறித்துக் கொண்டிருப்பதாக அவனின் நாட்கள் பின்னோக்கி நகர்ந்தன. பின்னால் நகர்ந்து கொண்டே இருந்தவனின் உலகம் அவன் போக்கில் உருண்டு கொண்டிருப்பதாக நம்பினான். அவள் மட்டும்... அவனோடு ஓடி ஓடி களைத்து... மறந்து நதியாகி அவன் வியர்வைத் துளைகளாகி அவனுள் ஒளிந்து கொண்டாள். தன் தீரா காதலால் நிரப்பி அவனை.. துரத்திக் கொண்டே இருந்தாள்.

"போ.. போ..போ...போ.....போ......போ....... நீ போகும் தூரமே உனது வாழிவின் பொருள். அவனை... விரட்டும்.. காலத்தின் முகப்பின் பின்பக்கத்தை...காண முற்பட்டுக் கொண்டே கடந்து விட்ட பொருளோடு.. கடக்க இருக்கும் நினைவுகளை மீண்டும் மீண்டும் காதலாகவே மாற்றிக் கொண்டிருந்தாள். அது காலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு... சீறிப் பாயும் அன்பின் கூர் என..... மிக வேகமாய் போகத் துவங்கியது.

******

முதலில் யுத்தனை தெரியாது என்று கூற இருக்கும் நண்பனின் குடுமியைப் பிடித்து... சுவற்றிலேயே அறைந்தாள் ஏவா. ஒவ்வொரு முறை மறுதலிக்கும் போதும்... உன் வீட்டில் ஒரு கொலை நடக்கும்.... என்று மிரட்டிய பொழுதை ஆணித்தரமாக அவனின் நெஞ்சில் பதிய வைத்தாள். அடுத்த நொடிகளில்....

அவனிடம் "யுத்தனை தெரியுமா?" என்று அதிகார வர்க்கம் கேட்கையில்...."தெரியும்... ஆனால் காட்டிக் கொடுக்க மாட்டேன்" என்று மறுதலிக்க இருந்தவன் கூறினான்... அதிகார வர்க்கம்.. ஆடிப் போனது.... உனக்கே இத்தனை திமிர் என்றால் அவனுக்கு எத்தனை இருக்கும் என்று கர்ஜித்தது.... ஏவா சிரித்தாள். சற்று தள்ளி நெருப்புக்குள் நிற்பவள் போல துடித்தாலும் அவன் கூறிய பதில்.... சற்று ஆசுவாசம் அடைய வைத்தது. யுத்தன் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று யுத்தனிடமே மனதுக்குள் வேண்டினாள். கோபங்கள் பட்டாம் பூச்சிகளாக அவளிடம் இருந்து பறந்து கொண்டிருந்தன.

"தோழர்களே.... இது திமிர் அல்ல... விதி.." என்று கூறியபடியே அடி தாங்காமல்.. சுருண்டு விழுந்தான் மறுதலிக்க மறுத்தவன்.

அடுத்து.... முன்னூறு டாலருக்கு காட்டிக் கொடுக்க இருந்தவன் காலில் விழுந்த ஏவா கெஞ்சினாள்.

"யுத்தன் என்னும் மாமனிதன் இந்த பூமிக்கு தேவை தோழரே.... தயவு செய்து காட்டிக் கொடுக்காதீர்கள்..."

"நானா...?....என்னைய்யா யார் என்று கேட்கிறீர்கள்.... நான் யுத்தனை யுகம் யுகமாய் சுமப்பவள். யுத்தனாலேயே படைக்கப் பட்டவள் என்று நம்புகிறேன்.... எனது விதியை மாற்றி எழுதும் வீணையின் ஸ்வரம் அவன். அவனிலாத உலகத்தில்.. புல் பூண்டுகள் இல்லை..என் போன்ற பெண் பெண்டுகளும் இல்லை....தோழரே... தயவு செய்து காட்டிக் கொடுக்காதீர்கள்..." அவள் கெஞ்சினாள்...கதறினாள்.

அவன் பேசிய பாஷை... வயிறு சம்பந்தப் பட்டது...தன்முனைப்பு தொடர்புடையது. பொருளாதாரம் தொடப்பட்டது.

"முடியாது" என்றான்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் பத்தே நிமிடங்களில்.....அவனை தன் விரல்களாலும்... நகங்களாலும்.... பற்களாலும்.... பலம் வாய்ந்த கால்களாலும்...கனத்துக்கிடந்த மார்புகளாலும் பிளந்து கடித்து குதறி முட்டி... உடைத்து....ஒரு மிருகத்தைப் போல அவனைக் கிழித்து குருதி குடித்து...கொன்று குவித்து.... தலை ஆட்டி எழுந்து நின்றாள்.

புலியாகிய பெண்ணை கண்ட காடு அதிர்ந்தது.

அது ஆதிக் காட்டின் நிறத்தை வேக வேகமாய் மாற்றியது.. தத்துவத்தை மாற்றும் போக்கில் மகத்துவம் நீங்கி மானுடம் செய்யும் புதுக் காட்டின் தீர்க்கத்தை தானாகவே மாற்றி விட்டதாக சிரித்தாள்... வாய் ஒழுகிய பச்சை ரத்தத்தின் சுவீகாரத்தோடு.

பரிசுத்த அலங்காரத்துடன் ஒரு கொலை நடந்ததாக நம்பினாள். அடுத்து 3000 டாலருக்கு ஒருவன் காட்டிக் கொடுக்க முன் வந்து இருந்ததை கேள்விப்பட்டு அவனையும்... உடைத்து குதறி....கடித்து கொன்று போட்டாள் ஏவா. மீண்டும் ஒருவன் வந்தான்.. கொன்றாள். மீண்டும் ஒருவன் வந்தான். கொன்றாள். மீண்டும் ஒருவன் வந்தான். சோர்ந்து போனாள். அழுதாள். தன் உயிர் போனால் பரவாயில்லை என்பதாக அழுதாள். கதறினாள். புலியாக தொடர்ந்து நிற்க முடியவில்லை. கொலைகள் முடிவுக்கு ஏற்றது அல்ல சடுதியில் புரிந்தது. ஆயுதங்கள் ஒருபோதும் நிம்மதியை தருவதில்லை என்று யுத்தன் அவளின் காதில் கிசு கிசுப்பதாக நம்பினாள். அதே நேரம் ஒரு நல்லவனை ஒரு பரிசுத்தமானவனைக் கொல்ல துடிக்கும் இந்த மானுடத்தின் துர் மனதை சபித்தாள். ஒரு பைத்தியத்தைப் போல.. அங்கலாய்த்தாள். காதல் கொண்டு... காதல் கொண்டு... கண்கள் துவண்டு.. காலம் துவண்டு... மிஞ்சி விட்ட மரணத்தை தனக்கு தா யுத்தா....என்று வேண்டி நின்றாள்.

*****

'போ யுத்தன். உன் கடன் மரணித்துக் கிடப்பதே. தியாகத்தின் சூடா விளக்கை நீ ஏற்றப் போகிறாய். போ.... இதுதான் சரி. தவறுகளை உன் சரியால் சரி செய்.." என்று அவனின் ஆழ்மனதில் அகலிகை விதைத்துக் கொண்டேயிருந்த வருடங்களை.... காலங்களை...கடந்து கடந்து...அவன் விழுந்த இடம்.... பரந்த மலை.

நாளை தான் மரிக்கப் போவதாக கூறியபடி... தனிமையில்.... மனம் உருகி வேண்டிக் கொண்டு அழுதபடி இருந்த யுத்தனை காணும்படியான... இடம்.

கண நேரத்தில் எல்லாம் புரிந்து போனது.

ஒரு பக்கத்தில் குருதி சொட்ட கொலைகளை செய்து நிரம்பிக் கொண்டிருக்கும் ஏவாளின் உருவம்... அகலிகையை ஒத்திருக்க.... இன்னொரு பக்கம் மனமுருகி அழுது கண்கள் மூடி தியானித்திருக்கும் அந்த தாடிக்காரன் முகம் தன் முகத்தை ஒத்திருப்பதை அதிர்ச்சியோடு... அர்த்தத்தோடு கண்டான்.

ஏவாவின் ரத்தக் கண்களில்... யுத்தன் ஒளி வீசி நின்றான். அவளுக்கும் புரிந்து போனது. காலத்தின் விளையாட்டின் அதி அற்புதம்... நிகழப் போகும் மாற்று எதிர்காலத்தை புரிந்து கொண்டாள். அவள்...அழுதுகொண்டே சிரித்தாள். வழியும் குருதியைக் துடைக்க மறந்தவளாய் கை எடுத்துக் கும்பிட்டாள்.

எல்லாம் புரிந்த யுத்தன்.... தன் செய்ய வந்த வேலையை மனதுக்குள் ஒரு முறை காட்சியாக்கிப் பார்த்து விட்டு...நிமிடத்தில் பரந்தமலை யுத்தனை வாய் பொத்தி... கை கட்டி... கால் கட்டி... பக்கத்தில் இருந்த ஒரு குகைக்குள்.. பிணத்தைப் போல படுக்க வைத்து குகையை கல் கொண்டு மூடி மறைத்து வைத்தான். அப்படியாக செய்வதுதான் ஆன்ம தேடலின் வெளி செய்யும் வெப்பமெனவும் தேகம் அடைதலின் உள் செய்யும் நுட்பம் எனவும் நம்பினான். காட்சிகளைக் கண்ட ஏவா.... மனதுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

விடியல் வந்தது..... விடிந்தே வந்தது.

காட்டிக் கொடுக்க மீண்டும் ஒருவன் வந்தான். கை விலங்கிடப்பட்டு யுத்தனாய் காலம் பின்னோக்கி வந்த யுத்தன்... மரண தண்டனை மேடையை நோக்கி வீறு நடை கொண்டான். எத்தனை முறைதான் அந்த ஒருவனையே பலி கொடுப்பது...? அவனுக்காக பலியாக இதோ இன்னொருவனும் வந்திருக்கிறான் என்று கண்களாலே வார்த்தை உதிர்த்து சந்தோசமாக மேடையில் மரித்துப் போனான்.

பூமி இருளடைந்தது. சூரியன், தன் நிறத்தை கொஞ்சம் மாற்றிக் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிக் கொண்ட ஒரு மணியில் இருண்மையின் வெளிப்பாடு..... அந்தகாரத்தின் சுவடுகளாய்..... மெல்ல திறக்கத் துவங்கின. அவை செய்யும் உண்மையில்... துலாவித் திரியும் ஏக்கக்காற்றின் வேகங்கள்... நியாயம் செய்வதாகவே பட்டது. பட்டவை எல்லாம்.. அப்படியா.....? படாமலும்... தொடும்... நுட்பங்களை யாது செய்யும் பிரபஞ்சம். கேள்விகளுக்கா பஞ்சம்.!

எது தொடருமோ அது தொடரும்.... என்பதை போல...காலம் தாண்டி நிகழ்காலத்துக்குள் வந்து விழுந்து விட்டிருந்தான் யுத்தன். அகலிகை.... அர்த்தம் மறந்து வியந்து பார்த்தாள். ஆட்டம் முடிந்து விட்டதை உணர்ந்த நிகழ்வின் சக மனுஷியாய்.

பரந்தமலையில்.......ஏவா.... மூச்சடக்கி கத்திக் கொண்டிருந்தாள். அது பிறழ்வுகளாக... உடல் முழுக்க தானாக பிய்ந்து தொங்கும்... கால மரணத்தை காதல் கொண்டு அவள் தாங்கி கொண்டிருப்பதாக, ஒரு குழந்தையைப் போல மண்ணில் புரண்டு அழுதாள். அழுவதில் தீருமா மரணம். யார் சொல்வது அவளிடம். காதுகளற்ற அலறலில்... காதல் மட்டுமே மிஞ்சிக் கிடக்கும் ஸ்தம்பித்தலின் ஸ்வரம் தானாக மீட்டுவது போல யாராவது சொல்லத்தான் வேண்டும்.

தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த யுத்தன்.....அர்த்தத்தோடு புன்னகைத்துக் கொண்டிருந்தான்...ஏதோ மந்திரம் முணங்குவதை போல.

பரந்த மலை யுத்தனை மறைத்து வைக்கப் பட்டிருந்த குகை திறந்து கிடந்தது.

- கவிஜி

எழுதியவர் : கவிஜி (16-Nov-16, 7:33 pm)
பார்வை : 354

மேலே