காத்திருந்து காத்திருந்து பூவிழி நோகுதடா
----------------------------------------------------------------
காத்திருந்து காத்திருந்து பூவிழி நோகுதடா
கண்கள் திறந்தாலும் இருளாக தெரியுதடா
வழிநான் அறிந்தாலும் மறந்த நிலையடா
நெஞ்சில் உள்ளவனே விரைந்து வந்திடுடா
காலத்தின் சுழற்சியால் சூழ்நிலை மாறுதடா
என்னவனே என்னை ஏய்க்க நினையாதேடா !
கீழேவிழுந்த மீனாய் துடிக்கிறது மனமும்
தாங்காது இனியும் காலமும் தாழ்த்தினால்
வேடிக்கை ஆனதோ வேங்கையும் உனக்கு
கன்னியர் எங்களை வருத்துவதும் ஏனோ !
மணக்கும் மல்லிகை என்றிடுவர் கன்னியை
காத்திடவும் வைப்பீர் கல்நெஞ்சுக் காளையர் !
சம்மதமும் கூறிட்டு மௌனமாய் சென்றாயே
அயல்நாடு நீசென்றதால் அந்நியர் ஆனேனா
இதயத்தில் நிறைந்திட்ட இளவரசி என்றாயே
காதல்ரசம் வழிந்திட காத்திருக்கும் என்னைநீ
மறந்திடவும் செய்திட்ட நிலைதான் என்னவோ
சந்தித்த வேளைகள் நினைவில் வந்துபோகுது !
வருவாயென தினமும் எண்ணிக் கழிக்கிறேன்
தருவாயென நல்ல பதிலெனக் காத்துள்ளேன் !
தொடர்பில்லா தொலைதூரம் உள்ளதால் என்
அலைபேசியும் அலைகிறது உன்னைத் தேடியே !
வந்திடுக என்னையும் அள்ளி அணைத்திடுக
காத்திருந்து காத்திருந்து பூவிழி நோகுதடா !
பழனி குமார்
25.11.2016