கருவறையாகும் கல்லறை - வினோதன்

பாரொளி முழுதும்
கடைந்து செதுக்கிய
பேரொளிப் புன்னகை
மாவொளி விழிகளுடன் !

தோற்ற எதிரியும்
தொடை நடுங்கி வியக்கும்
வீரத்தின் தோற்றுவாய் - இனி
எப்போது தோன்றுவாய் !

உன் உயிர் தேடி வந்த
கொலையாளி எவரும்
கொன்றது இல்லை
தத்தம் பயம் கூட - ஏன்
நின்றது கூட இல்லை
உன் நிழல் அருகில்கூட !

உன் சிந்தனைத் துளிகள்
பெருகிப் பெருங்கடலென
எதிரிகள் காட்டில்
தீயெனப் பற்றினாலும்,
உன் எல்லைக்குள்
சர்க்கரை வார்த்தது !

எமனுக்காய் அழைத்துவிட்டு
ராணுவக் காலனியின்
கடைசி முடிச்சை - பெரு
மூச்சிழுத்து முடித்திருப்பாய் !

பணக்காரனாக பிறந்தாய்
கோடிகளில் இதயம் வென்று
மாவீரனாய் இருந்தாய்
மனக்காரனாய் இறந்தாய்
மக்கள் மனத் தூண்களில்
எப்போதும் இருப்பாய் !

போராளிகளுக்கு சாவேது ?
சாவது சதையும் எலும்பும் !
வீரமெனும் சொல் கேட்டால்
மூளை பள்ளங்களில்
படிந்து கிடைக்கும் - உன்
நினைவு துடித்து எழும்புமே !

சாவை வென்றவன் - உமை
சந்திக்க வருகிறான் - சற்று
எழுந்து நில்லுங்கள் எமராஜா !

ஒவ்வோர் போராளியின்
கல்லறையும் கருவறையே
வீரம் காய்க்கும் மரமொன்று
விழுந்து இளைப்பாறுகிறது !

என்றென்றும் மனங்களில்
நிறைந்தே இருப்பாய்
நீங்கா பெரு நெருப்பாய் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (26-Nov-16, 12:57 pm)
பார்வை : 87

மேலே