உனக்கொரு மடலடியே
குளிர்காலம் கண்டறிந்த காதலன் கூற்று :
கூதிரிளங் காற்றென்னைக் கொல்லுதடி வான்மதி
காதலிலே உள்ளம் கனன்றெழவே நெஞ்சகமோ
ஒன்றும் விளங்காமல் ஓங்கும் நெருப்பிற்கும்
மன்னும் குளிருக்கும் மந்தியெனத் துள்ளுதுகாண் !
உன்னை நினைத்தே உருண்டோடும் நாழிகைகள்
என்னை நகைத்திங்கே எக்காள மாகப்
பரிகசிக்கும் ஆட்டமெல்லாம் என்னுள் நடக்க
வரிவரியாய்க் கொட்டி வனைகின்றேன் இம்மடலைக் !
காவியம் பாடக் கவிதை பலவெழுத
ஓவியம் கற்க உயர்ந்தவறி வெய்திடவே
ஊரைப் பிரிந்துயான் உன்னைப் பிரிந்திங்கே
தூரங் கடந்து தொலைவாக வந்துள்ளேன் !
ஆயிரம் வேலை அமைந்த எனக்கேயுன்
வாயிடைத் தேனமுதம் வாங்கிய ஞாபங்கள்
நீங்காது கண்ணில் நிலைகொள்ள வான்புயலா
யேங்கிடச் செய்யுதுகாண் ! ஏழையான் என்செய்வேன் ?
உன்விரல்கள் பட்டவிடம் உன்னைநான் தொட்டவிடம்
உன்மூச்சும் என்மூச்சும் ஊன்றிக் கலந்தவிடம்
எல்லாமே இந்த எமன்போலே தோன்றிவந்து
கொல்லும் குளிரின் கொடுமையி லேநடுங்கி
என்னைப் படுத்த எழுதுகிறேன் இம்மடலை !
உன்னை நினைத்தே உளத்தில் கவலை !
நடுங்கும் குளிருந்தான் நங்கையே நின்னைக்
கொடுமை புரிந்து கொதிப்பேற்றி விட்டதுவா ?
நான்சுவைத்த மேலிதழ்கள் நாணச் சிவப்பிழந்து
வான்வெளுப்பை வாங்கியதா ? வாலைக் குமரிநின்றன்
கைகால் நடுநடுங்கக் கம்பளி யிட்டாயா ?
நெய்கருமைக் கூந்தல் நெருக்கித் துணியாலே
காதோடு சேர்ந்துநீ கட்டிப் புதைத்தாயா ?
வாதாடி டாமல் வளமான என்மாமி
தந்திடுங்க சாயம் தவறாம லுண்பாயா ?
சிந்தும் சலதோசம் சீறிடத்தான் நோநொந்து
இருமிக் கிடப்பாயா ? இங்கெனக் கதனால்
இருப்புங் கொளவில்லை ! இங்கேநான் என்செய்வேன் !
வந்துன்றன் நெற்றி வெதுவெதுக்கப் பத்திட்டு
முந்து மிருமலுக்கு முக்கடுகம் தான்கொடுத்துப்
பார்க்க வியலாத பாங்கினை எண்ணுங்கால்
வேர்த்தென் உளம்பதைத்து வெந்து துடிக்கிறதே !
என்வாழ்க்கைச் சீதனமே என்சொல் தனைக்கேளாய் !
முன்போல அல்ல முகையே உனக்குள்
இரண்டுயிர் இங்குண்டு இரண்டா முயிரோ
கரைந்துன்முன் பேசும் கவிஞன் உயிரடியோ !
பத்திரமாய்ப் பார்த்துப் பரிவோடு சீராட்டிக்
கத்துமெனைக் காத்தல் கடனே இனியுனக்கு !
உன்றன் நலங்காத்தல் ஊர்கள் கடந்திருக்கும்
என்றன் நலங்காத்தல் எல்லாமே உன்கையில் !
கம்பளி யொன்றே கதியாய்க் கழிநேரம் !
அம்மா தருகின்ற அன்பின் மிளகுரசம்
எல்லாம் குடித்தே எழிலே இருந்திடுவாய்ச்
சொல்லின் மடலுக்கு சோதிக்கு மிக்காலம்
தீரும் முனமே தெளிவாய் விடையனுப்பு !
கோருகிறேன் அன்பன் கொதித்து
-விவேக்பாரதி