சிரிப்பு வரும் மனிதனை நினைத்தால்

சிந்திக்கும் ஆற்றல்
பேசுகின்ற வாய்ப்பு
உழைக்கும் திறன்
இருந்தும் மனிதன்
செய்திடும் செயல்
விந்தையிலும் விந்தை
வியக்கும் வினாக்குறி
கேலிக்குரியக் கேளிக்கை !
பிறந்திடும் வழியொன்றே மனிதனுக்கு
இறந்தபின் அடைவதும் இடமோன்றே
இடையில் வருவதேன் சாதிமதவெறி
பிரிவுகள் காண்பதேன் பிறந்தவுடன் !
பற்றுவதேன் பணவெறி உள்ளத்தில்
தொற்றுவதேன் குலவெறி குணத்தில்
நெஞ்சமும் நஞ்சாகுது துளித்துளியாய்
வஞ்சமும் வேரூன்றுது நெஞ்சங்களில்
தஞ்சம் அடைந்து தழைக்குது சமூகத்தில் !
சுயநலம் கொடிகட்டிப் பறக்கிறது சுதந்திரமாய்
பொதுநலம் கைகட்டி நிற்கிறது பொம்மையாய் !
முதிர்ந்த மனங்கள் உதிர்ந்தப் பூக்களானது
வளரும் கொடிகள் பாதைமாறி படர்கிறது !
ஐந்தறிவும் பார்க்கிறது ஏளனமாய் ஆறறிவை
சிரிக்கிறது மனிதனை நினைத்து மந்தியும்
சிந்திக்கும் மனிதனும் மாறுவானா இனியும்
சிந்தையில் சுழல்கிறது நாளும் எனக்கும் !
பழனி குமார்