கலங்க வேண்டாம் அன்னையே

அன்னை யுன்றன் வேதனை
****அறிய முடிய வில்லையே !
என்ன சொல்லித் தேற்றிட
****எனக்கு வயது மில்லையே !
சின்னப் பிள்ளை யாயினும்
****சிறந்தத் துணையாய் விளங்குவேன் !
உன்னை வாழும் நாள்வரை
****உள்ளன் போடு போற்றுவேன் !

சென்ற நாளை மறந்திடு
****செல்ல மகனை நினைத்திடு !
வென்று நானும் காட்டுவேன்
****விடியல் பூக்கும் பொறுத்திரு !
துன்பம் விலகும் நிச்சயம்
****துடைப்பேன் உன்றன் துயரினை !
நன்மை கூடி வந்திடும்
****நடுக்கம் வேண்டாம் வாழ்வினில் !

வண்ண மாக மாற்றுவேன்
****வருத்தம் வந்தால் ஓட்டுவேன் !
புண்ணாய்ப் போன மனத்தினைப்
****புரிந்து நடப்பேன் என்றுமே !
விண்ணும் மண்ணும் போற்றிட
****வியக்கச் செய்வேன் உண்மையாய் !
கண்ணுள் வைத்துத் தாங்குவேன்
****கலங்க வேண்டாம் அன்னையே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Dec-16, 1:31 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 48

மேலே