காவல் தெய்வம்

எனக்கு நெஞ்சு முழுதும் வேதனையாதான் இருந்தது. நான் பிறந்து கொஞ்ச நாளைக்குத்தான் அம்மாவின் அரவணைப்பு எனக்கு கிடைத்தது. அம்மாவிற்கு என்ன ஆனதோ எனக்கு தெரியாது. என் கூட பிறந்தவங்க யாரையுமே என்னால பார்க்க முடியல. தன்னந்தனியா இருந்தேன். பலர் என்னை வந்து பார்த்துட்டு போவாங்க. ஏன் வர்றாங்க….. எதுக்கு என்னை பாக்குறாங்க….. எதுமே எனக்கு தெரியாது.

அதுபோலவே இவரும் வந்தாரு. என்னை பார்த்தாரு. என்னை தூக்கிக்கிட்டு அவரோட வீட்டுக்கு வந்திட்டாரு. நான் இங்கே வரும்போது அவன் சந்தோஷமாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தான். என் சாயல் தான் அவனுக்கும். உடல் முழுதும் பஞ்சு போன்ற வெண்மையான முடி, அழகான கருத்த கண்கள். சிவப்பான உதடுகள். நிமிர்ந்த காதுகள். மெல்லிய வளைவைக் கொண்ட ஓரளவு பெரிய வால்.

அவனைக்கண்ட பின் என் உடல் நடுக்கம் இன்னும் அதிகமாயிற்று. தலைய சுத்தி பார்த்தேன். முதல் இருந்த வீட்டில் என்னை அடைத்து வைத்திருந்த கூடு போலவே இங்கேயும் ஒரு கூடு இருந்தது. இது பார்ப்பதற்கு அழகாகவும் சுத்தமாகவும் இருந்தது. அங்கு இருந்தது எப்போதும் அடைத்தே கிடந்தது. இங்கு உள்ளது திறந்தே இருக்கும்போலிருந்தது. அன்று நான் நினைத்தது சரிதான். என் எஜமானனின் உள்ளம் போலவே அதுவும் எப்போதும் திறந்தே இருந்தது.

என் நடுக்கத்தை கண்ட அவர் “ஏன் செல்லம் பயப்படுற. அங்க பாரு வைட்டி எப்படி சந்தோஷமா இருக்கான்னு! நீயும் அவன் கூட சேர்ந்து விளையாடு. இன்னைல இருந்து உன் பெயர் ஷீபா!” என என்னை ஆசுவாசப்படுத்தி இறக்கிவிட்டார். “வைட்டி” பெயருக்கேற்றாற் போலத்தான் இருந்தான். அருகே வந்தான். என் தலையை தட்டினான். என் உடலை நக்கினான். மனிதர்களுக்கு மட்டுந்தான் நட்பு இருக்குமா? எங்களுக்குள்ளும் நட்பு உதயமானது.

அவனோடு தான் எப்போதும் விளையாடுவேன். ஒன்றாக குளிப்போம். குதூகளிப்பபோம். ஒரு தட்டில் சாப்பிட்ட அனுபவம் இல்லை. ஆனால் வெவ்வேறு வேளைகளில் சாப்பிட்டதாக நினைவு இல்லை. ஒரே வேளையில் உண்டோம். ஒரே கூட்டில் உறங்கினோம். எஜமானனை எப்படி மதிப்பது. அவரோடு எப்படி பழகுவது என அவனிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன். அவனுக்கு நம் எஜமானன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் இருந்தது. சில வேளைகளில் அவருடைய வீட்டிலேயே நான் மலம் கழித்த சந்தர்ப்பமும் உண்டு. ஆனால் அவன் எப்போதும் வீட்டுக்கு வெளியேதான். சுகாதாரத்தையும் எனக்கு காட்டிக்கொடுத்தவன் அவன்.

இரவு கூட்டில் இருக்கும்போது எப்போதும் எஜமானனைப் பற்றியே கதைப்பான். நீண்ட நேரம் விழித்திருப்பான். யாராவது தெரியாதவர்கள் நடமாட்டம் தெரிந்தால் ஊளையிடுவான். பெலமாக குறைத்து எஜமானனுக்கு எச்சரிக்கை கொடுப்பான். இவ்வாறு பல இரவுகள் அவன் செய்திருக்கிறான். பல சந்தர்ப்பங்களில் நான் அயர்ந்து தூங்கிவிட்டிருப்பேன். ஆனால் அவன் மட்டும் எப்படித்தான் விழித்துக்கொண்டிருப்பானோ தெரியாது. உண்மை காவல்காரன்.

எஜமானனின் உறவினர்கள் வீட்டுக்கு வந்தால், சிலர் எம்மைக் கண்டு அறுவறுப்பு அடைவார்கள். நம் எஜமானன் எம்மை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பார் என்று அவர்களுக்கு தெரியாது. எம்மால் அதை எடுத்துக்கூறவும் முடியாது. எதற்கு வம்பு என்று அவர்கள் போகும்வரை இவன் ஒதுங்கியே இருப்பான். இவன் அருகிலேயே நானும் படுத்துக்கிடப்பேன். சிறுவர்களைக் கண்டால் துள்ளிக்குதிப்பான். சில சிறுவர்கள் பயப்பட்டு கையில் உள்ளதால் எறிவார்கள். அடியை வாங்கிக் கொண்டு வந்து கூட்டுக்கு அருகில் அமர்வான். அவனைப் பார்த்து கேலியாக நான் சிரித்த நாட்களும் உண்டு. எப்போதும் எந்த சிறுவரையும் கண்டு அவன் குறைப்பதும் இல்லை. அவர்கள் மீது தன் ஆசையை குறைப்பதும் இல்லை.

மிகவும் பொறுமைசாலி, புத்திசாலி, உழைப்பாளி, காவலாளி. எனக்கு ஆசானாக, சகோதரனாக, நண்பனாக இருந்தான். மனிதர்கள் மனிதனைப் பார்த்து “நாயே” என திட்டுவதை அவதானித்திருக்கேன். அவர்கள் நாயாக பிறந்து இவனோடு சேர்ந்து வாழ்ந்திருந்தால்தான் நாயின் அருமை தெரியும். எம் வர்க்கத்திற்கே இவன் புகழ் செய்தவன். ஆனால் யாருக்கும் அது தெரியாது. அந்த சம்பவத்தை நினைக்கும்போது என் தொண்டைக் குழி வரண்ட நிலமாகிறது. நெஞ்சு பாறையைப்போல் பாரமாகிறது. இதயம் வெடிப்பதுபோல் துடிக்கிறது. குருதி கண்ணீராய் கொட்டுகிறது.

அன்று காலையிலிருந்து அவனது நடவடிக்கைகளில் மாற்றத்தின் செயல்கள் இருந்தது. முகத்தில் ஏமாற்றத்தின் அறிகுறி தெரிந்தது. சோர்வாகவே கிடந்தான். சோகமாகவே என்னை பார்த்தான். மனிதர்களுக்கு கிடைக்காத சக்திகள் பல எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ சாதனைகளை வென்ற மனிதனுக்கு தன் மரணத்தை வெல்லும் சக்தியை கண்டுபிடிக்கமுடியவில்லை. அது எப்போது வரும் என்றே அவனுக்கு தெரியாது. ஆனால் எம்மை போன்ற பிராணிகளுக்கு சில அமங்கலங்கள் முன்கூட்டியே தெரியும். தன் தந்தையாவே நினைத்து வழிபட்ட எஜமானனின் உயிர் இன்று காலனின் காலடிக்கு போய்விடப்போகிறது என்பதை வைட்டி முன்கூட்டியே அறிந்துகொண்டான். அன்று காலையிலிருந்து அவரையே சுத்தி சுத்தி வந்தான். அவரை வெளியே போகவிடவில்லை. “ஐயா….. ஐயா….. உங்களை நான் உங்கள் குடும்பத்தை விட்டு பிரியவிடமாட்டேன்.” என அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தான். அவன் கூறியது எனக்கு மட்டுந்தானே புரியும். பாவம் மனிதர்களுக்கு நம் பாஷை தெரியவா போகிறது? அதனாலென்ன நம் பாசம் குறையவா போகிறது?

இவன் துடிப்பதை பார்த்து, அவனது சோகமான விழிகளைப் பார்த்து இவன் உடலுக்கு ஏதும் வருத்தமோ என்னவோ என்று எஜமானன் அவனை தூக்கி வைத்து பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவன் என்னை அழைத்தான். “என் எஜமானனை உன்னிடம் ஒப்படைக்கின்றேன். கவனமாக பார்த்துக்கொள்.” என்றான். காலனிடம் வாதாடியிருப்பான் போலும். எஜமானனை விட்டுவிட்டு தன் உயிரை எடுத்துக்கொள்ளும்படி மன்றாடியிருப்பான் போலும். அவர் கைகளிலிருந்து சர்ரென்று கீழே குதித்தான். அவர் காலடியில் படுத்துக்கிடந்தான். “நன்றி ஐயா….” என ஒரு மூச்சில் கூறினான். அத்தோடு அவன் மூச்சும் நின்றது. இழந்தேன். என் நண்பனைää என் சொந்தத்தைää என் சகோதரனை. ஐயோ…. என குலறினேன். என்னால் குறைக்க மட்டுந்தான் முடிந்தது. எஜமானனின் கண்ணீர் துளித்துளியாக அவன் மேல் விழுந்தது. அவன் ஆத்மா சாந்தியடைந்து விண்ணுலகம் பறந்தது.

பல நாட்கள் கடந்தாயிற்று இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் நிச்சயமாக எனக்குத் தெரியும் இனி இந்த குடும்பத்திற்கு அவன் தான் காவல் தெய்வம்!

உண்மைகள் கலந்த கற்பனையுடன்
சித்திரவேல் அழகேஸ்வரன்

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (13-Dec-16, 10:29 pm)
Tanglish : kaaval theivam
பார்வை : 351

மேலே