SM முத்து என்கிற வள்ளுவன்
S.M முத்து என்கிற வள்ளுவன்
ஜப்பானில் நடக்கும் "தமிழ் இலக்கிய நாடகக்கலை விழா"வில் கலந்துகொள்ள அழைப்பு வந்ததில் இருந்து கொஞ்சம் படப்படவாகவே இருக்கிறது .அங்கு நடக்கும் விழாவில் ஐந்து நிமிடம் சொற்பொழிவு ஆற்ற அவ்வளவு பதற்றம். எனது சொற்பொழிவில் உள்ள திருத்தல் பணிகளை முடித்துவிட்டு அன்றிரவு உறங்கச்சென்றேன்.
தமிழின் பெருமைகளை எடுத்துரைக்கும் நாடக விழா அது. தமிழிற்கு பெருமை சேர்த்தவர்களை கௌரவிக்கும் விழாவும் கூட, எனது சொற்பொழிவு மிகவும் சிறியது என்றாலும், அதனை சிறப்பாக முடிக்க நிறையவே பயிற்சி தேவைப்பட்டது .
நாளை காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படவேண்டும் ,எனது அனைத்து உடைமைகளையும் எடுத்து வைத்துவிட்டு அன்றிரவு உறங்கச்சென்றேன். உறங்கும் சிறிது நேரம் முன்பு எனது நினைவலைகள் சென்ற வருடம் ஜப்பானில் நடந்துமுடிந்த விழாவிற்கு சென்றது .
நான் மதியழகன், எனது பல்கலைக்கழகத்தின் மூலமாக சென்ற வருடம் நடந்த விழாவிற்கு பார்வையாளராக சென்றேன், இந்த வருடம் ஒரு படி மேலே சென்று சொற்பொழிவாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். "தமிழிற்கு வெளிநாட்டு கலைஞர்கள் எவ்வாறு பெருமை சேர்த்தார்கள், எவ்வாறு பெருமை சேர்த்து வருகிறார்கள் "என்பது தான் எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு .
சொற்பொழிவை தயார் செய்ய பெரிதும் மெனக்கெட வேண்டியது இருந்தது, இங்குள்ள தமிழ் மேதைகளை பலரை சந்தித்தும், பற்பல புத்தகங்களை படித்தும் பெரும் தகவல்களை திரட்டி ,சிறிய தொகுப்பை தயார் செய்து முடிப்பதற்குள் ஒருவழி ஆகிவிட்டேன் .
சென்ற வருடவிழாவின் முடிவில் பார்வையிட்டாளராக சென்று பெரும் இதய கனத்துடன் திரும்பினேன். தமிழிற்கு நம்மால் முடிந்த காணிக்கை எதாவது செலுத்த வேண்டுமென்று, அன்றுமுதல் ஒரு ஆண்டு முயற்சி மேற்கொண்ட பலன் தான் இன்று ஒரு பேச்சாளராக செல்கிறேன் .
அன்றிரவு நன்றாக உறங்கி ஓய்வெடுத்து காலை எழுந்து எனது சிறிய பணிகளை முடித்துவிட்டு, விமான நிலையம் புறப்பட்டு சென்றேன். என்னுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் பதினைந்து மாணவர்கள் விழாவில் கலந்து கொள்ள தேர்வாகி இருந்தோம் .சிறிது நேரம் அனைவரும் ஒன்றுகூடி பேசி முடித்துவிட்டு விமானத்தில் ஏறிச்சென்று அடுத்த நாள் ஜப்பானில் தரை இறங்கினோம் .
ஜப்பானில் கால்பதித்த எனக்குள் பெரும் வியப்பு, சென்ற வருடம் வந்த பொழுது இங்கு இருந்த சாலைகள், பூங்காக்கள், தொழில் வளாகங்கள் என அனைத்தும் மேம்படுத்தப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டும் இருந்தன .அங்கு உள்ள மக்களின் முகத்தில் இப்பொழுதும்,எப்பொழுதும் புன்னகை காண முடிந்தது. அடுத்த நாள் விழா என்பதால் நேராக தங்கும் விடுதிக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து, இரவு உணவு உண்டு, பின்பு உறங்கச்சென்றேன் .
அடுத்த நாள் காலையில் ஒருமுறை சொற்பொழிவை பயிற்சி செய்துவிட்டு விழாவிற்கு புறப்பட்டு சென்றேன் .விழா ஆரம்பித்த அரை மணி நேரத்தில் எனது சொற்பொழிவை நிகழ்த்த வேண்டும், சிறிய பதட்டம் இருந்தாலும் நிறையவே பயிற்சி மேற்கொண்டதால் மன தைரியத்துடன் இருந்தேன் .எனது நேரம் வந்ததும் எனது உரையை நிகழ்த்தினேன். ஜி.யூ போப்,வீரமாமுனிவர் முதல் தமிழுக்கு பெருமை சேர்த்த அனைவரின் பங்களிப்பை புகழ்ந்த வண்ணம் இருந்தது என்னுடைய சொற்பொழிவு, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துவிட்டு ஐந்து நிமிடத்தில் உரையை நிறைவு செய்தேன்.
ஓரளவிற்கு கைதட்டல் கிடைத்த சந்தோசத்துடன் சென்று பின்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். ஏனைய நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்று பெரும் ஆவல் இருந்தது, அதே ஆவலுடன் அடுத்த வந்த தமிழ்நாட்டு மாணவர்களின் சொற்பொழிவும் வித விதமான தலைப்புகளில் இருந்ததால் விழா மிகவும் சுவாரசியமாகவும் சிறப்பாகவும் இருந்தது. தமிழிற்கு பெருமை சேர்த்த பலரை பற்றி தெரிந்து கொள்ளவும் முடிந்தது . நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டாலும் புதுமையான தகவல்கள் தெரிந்து கொள்ள மேலும் ஆவல் கொண்டேன். அதே ஆவலுடன் அன்றைய நிகழ்ச்சிகளும் நிறைவுபெற்றன.
விழா இரண்டு நாட்கள் என்பதால், இரண்டாவது நாள் முக்கியமான நிகழ்வுகள் இருப்பது வழக்கம் .அன்றைய முதல் நிகழ்ச்சியாக ஜப்பான் மாணவர்களின் "சிலப்பதிகாரம்" நாடகம் அரங்கேறியது, அதுவும் தமிழில் பேசி,நடித்து அனைவரையும் வாயடைக்க வைத்தனர், அதுவும் "கண்ணகியாக " நடித்த பெண் அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தினால் .
நாடகம் முடிந்ததும் திடீரென பெரும் குரல் ஒன்று எழுந்தது ,அதாவது ஜப்பான் நாட்டின் பிரதமர் அங்கு வருகை தருவதாக அறிவித்தார்கள். பொதுவாக இதுவரை நடந்த விழாவில் எந்தவொரு ஜப்பான் பிரதமரும் வருகை தரவில்லையாம். இந்த ஆண்டு முதல்முறையாக ஜப்பான் பிரதமர் வருவது அனைவருக்கும் கொஞ்சம் வியப்புதான் என்றாலும், எதற்காக வருகிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமானது .வருகை தந்த பிரதமர் எதோ ‘தபால் தலையை’ வெளியிடுவதாக தகவலை
அறிவித்தார்கள்,தெரிவித்த மாதிரியே தபால் தலையை பிரதமர் வெளியிட தான் வந்துள்ளாராம் .
யாருக்காக இந்த தபால் தலை ? எதற்காக இந்த தபால் தலை ? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது . சிறிது நேர காத்திருப்புக்கு பின் அதற்கான பதிலும் கிடைத்தது.
பிரதமர் "S.M முத்து " என்கின்ற தமிழருக்கு தபால் தலையை வெளியிடுவதாக தெரிவித்தார் .எனக்குள் பெரும் கேள்வி ஒன்று எழுந்தது. யார் இந்த S.M முத்து? அவருக்கு ஜப்பானில் தபால் தலை வெளியிடும் அளவிற்கு அப்படி என்ன செய்தார் என்று !!! அதற்கான பதிலும் அவரே கூறினார் .
S.M முத்து தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓமலூரில் பிறந்தவர் . இவர் தமிழ் இலக்கண,இலக்கியத்தில் பெரும் ஆர்வம் உடையவர், சிறந்த எழுத்தாளரும் கூட .இவர் தமிழின் பெருமையை உலகிற்கு அறியச்செய்த திருக்குறளை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க்க உதவி செய்துள்ளார். ஜப்பான் இலக்கியத்திற்கு இது பெரும் கௌரவமாக கருதி S.M முத்துவிற்கு அந்நாட்டு அரசு இவர் உருவ படத்துடன் கூடிய தபால் தலையை வெளியிட சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது .
அது சரி, இவர் திருக்குறளை மொழிப்பெயர்க்க உதவி தானே செய்தார், அப்போ மொழி பெயர்த்தது யார்? என்ற கேள்வி என்னுள் எழுந்தது .அதற்கும் சற்று நேரத்தில் பதில் கிடைத்தது ,மொழி பெயர்த்தது ஜப்பான் நாட்டு எழுத்தாளர் சூழோ .
யார் இந்த சூழோ ?
சூழோவின் முழுப்பெயர் சூழோ மஸ்துங்கா ,இவர் திருக்குறளின் பெருமையை அறிந்து அதனை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்க ஆவல் கொண்டு தன்னுடைய தமிழ்நாட்டு நண்பராகிய சேகரிடம் உதவி நாடியுள்ளார்,சேகரோ சூழோவின் கோரிக்கையை ஏற்று தன்னுடைய தந்தையான
S.M முத்துவை அறிமுகம் செய்துவைத்துள்ளார் . அப்போதிலிருந்து S.M முத்துவும், சூழோவும் நண்பர்களாகி திருக்குறளை மொழி பெயர்க்க ஆரம்பித்துள்ளனர்.சிறப்பு என்னவென்றால், தங்களுடைய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் கடிதம் மூலமாகவே நிகழ்ந்துள்ளன.
முதலில் சூழோவின் குறிப்பீட்டிற்கு ஜி.யூ போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு திருக்குறள் புத்தகத்தையே அனுப்பியுள்ளார் முத்து,1970-ம் ஆண்டு ஆரம்பித்த மொழிமாற்ற பணி 1980-ம் ஆண்டுவரை நீண்டுள்ளது .1980-ம் ஆண்டு சூழோ தன்னுடைய ஜப்பானிய மொழியில் திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டுள்ளார் .சூழோ தன்னுடைய முதல் இந்திய வருகையை 1981-ம் ஆண்டு நிகழ்த்தியுள்ளார் .அப்போது S.M முத்துவும், சூழோவும் இணைந்து மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு சென்றுள்ளனர். தன்னுடைய அனைத்து அனுபவங்களையும் சூழோ
" MY INDIA AS SEEN THROUGH LETTERS” என்னும் புத்தகம் மூலமாக வெளியுலகிற்கு தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சூழோ மணிமேகலை, நாலடியார், பஞ்சதந்திர கதைகளையும் ஜப்பானிய மொழியில் மொழிபெர்யத்துள்ளாராம் .
இத்தகவலை ஜப்பான் பிரதமர் சொல்லி முடித்ததும் விழா மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி S.M முத்துவிற்கும்,சூழோவிற்கும் தங்களது மரியாதையை தெரிவித்தனர். உலகமே போற்றும் திருக்குறளை தங்கள் மொழியில் மொழிப்பெயர்க்க உதவியதால் தான் S.M முத்துவின் உருவ படத்துடன் கூடிய தபால் தலையை வெளியிட்டு பெருமை படுத்தியுள்ளோம் என கூறி தனது உரையை நிறைவு செய்தார் ஜப்பான் பிரதமர். மற்ற கவிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும் உரிய மரியாதையை செலுத்திவிட்டு அங்கிருந்து விடைபெற்றார் பிரதமர் ,அன்றைய நிகழ்ச்சிகளும் முடிவிற்கு வந்தது. அனைவரும் அவரவது இருப்பிடத்திற்கு சென்றோம்.
எனது அறைக்குள் நுழைந்ததும் எனக்குள் ஆயிரம் கேள்விகள் .,இந்த S.M முத்து பற்றிய தகவல், எனக்கு ஜப்பானிற்கு வந்துதான் தெரிந்திருக்க வேண்டுமா? அவரைப்பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ளாதது பெரும் குற்றமே என்று.
வீரமாமுனிவர் ,ஜி.யூ போன்றவர்களைப்பற்றி ஓரளவிற்கு அனைவருக்கும் தெரிந்ததே,
S.M முத்துவிற்கு பெருமை சேர்க்க ஜப்பான் அரசாங்கத்திற்கு தெரிந்திருக்கிறது, நமது மாநிலத்திற்கும்,நாட்டிற்கும் ஏன் அது தெரியவில்லை .இவரை போன்ற கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் வெளியுலகம் தெரியாததற்கு ஊடகங்கள் தான் பொறுப்பா என்று எனக்குள் ஒரு கேள்வி? அவர்கள் மேல் குறையெப்படி நான் கூறுவது? இதுபோன்ற தமிழ் கவிஞர்கள் அல்லது எழுத்தாளர்கள் எழுதிய புத்தகம் என் புத்தகப்பையில் உள்ளதா ? தேடினேன் இல்லை ! சிறு கவிஞர்கள் எழுதிய கவிதைப் புத்தகம் என் அறையில் உள்ளதா ? இல்லையே ! பின் நான் எப்படி மற்றவர்களை குறை சொல்ல முடியும், குறை என்னிடம்தானே! எனது நாட்டு ,எனது மொழி படைப்பாளர்களை நான் மதித்து அவர்களது படைப்பையும் ,திறமையும் படித்து போற்றினால் தானே எனது மண்ணிற்கும் ,தமிழிற்கும் பெருமை. இனியாவது மற்ற படைப்பாளர்களின் படைப்பை படிப்பதோடு இல்லாமல் ,நல்ல படைப்புகளை மற்றவர்களுக்கு படிக்க பரிந்துரை செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். இம்முடிவை என் மனசாட்சியும் வரவேற்றது.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
(ஒருவனுக்குத் துன்பம் வந்த காலத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அக்காலத்தை நோக்க, அஃது இப்பூமியைவிட மிகப் பெரியதாகும்)
இத்திருக்குறளுக்கு ஏற்றவாறு வாழ்ந்த S.M முத்துவிற்கும், சூழோவிற்கும் எனது மரியாதையை செலுத்திவிட்டு, அதற்கு ஏற்றவாறு 2007-ம் ஆண்டு S.M முத்துவிற்கு தபால் தலையை வெளியிட்ட ஜப்பான் அரசுக்கு கோடி நன்றிகளை மனதில் தெரிவித்துவிட்டு, பெரும் மன கனத்துடன் ஜப்பானை விட்டு வெளியேறினேன் .
சே .மதியழகன் : Mob:8550041500