என்னவன்

என்னங்க....

என்னம்மா.....

பசிக்குதுங்க.....

இரவு 2 மணிக்கு பசிக்குதுனு குழந்தை போல் கேட்கும் தனது மனைவியை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன் அவள் நெற்றியில் தன் இதழ் பதித்து ' இதோ சாப்பிட ஏதாவது எடுத்து வரேன் ' என்று அடுக்களை நுழைந்தவன் சிறிது நேரத்தில் பாலும் பிரட் டோஸ்ட்டும் எடுத்து வந்தான்.

அதை தானே தன் மனைவிக்கு ஊட்டிவிட்டான்.

'என் கையில குடுங்க நானே சாப்பிட்டுகிறேன் ' என்றவளை தடுத்து தானே ஊட்டினான்.

அவள் முகத்தில் புன்னகையுமாய் கண்களில் காதல் கொண்டு தன் ஆசை கணவனை பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

நந்தன் தன் மனைவி மோகினிக்கு வாய் துடைத்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து இருக்கும் படி கூறிவிட்டு பாத்திரத்தை உள்ளே வைத்துவிட்டு வந்தான்.

மனைவியின் பார்வை தன் மேலேயே இருப்பது உணர்ந்து அவள் அருகே சென்று அமர்ந்தான், நந்தன்.

' என்னாச்சுமா ஏன் அப்படி பார்த்துக்கிட்டிருக்க...? ' என்று மனைவியின் கையை தன் கை மீது வைத்து தடவியவாறு வினவினான்.

அவள் உதடு புன்னகைத்தாலும் கண்கள் கசியத் தொடங்கின.

அவள் கண்களில் கண்ணீரைக் கண்டதும் பதறிப்போனான், நந்தன்.

' என்னடா செல்லம் என்னாச்சு உடம்புக்கு எதும் பண்ணுதா.... ' என்று அவள் அருகே சென்று கேட்டவனிடம் ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தவள் அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

அவளது நினைவு 35 வருடங்கள் பின்னோக்கி சென்றன.

கல்லூரி-
M.C.A இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள் அனைத்து பாடத்திலும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவள் அன்று தனது கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ இருக்கவே அதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு அதையே யோசித்துக் கொண்டு வந்தவள் எதிரே வளைவில் திரும்பிய நபரை பார்க்காமல் மோதினாள்.

அவனும் அதை எதிர்ப் பார்க்காததால் இடி வாங்கினாலும் கீழே விழாமல் நின்றான்.

சாரிங்க என்று நிமிர்ந்து கூட பார்க்காமல் சொல்லி விட்டு ஓடிய அவளின் பின்னே அவனது விழிகள் ஓடின.

இன்டர்வியூ அறைக்குள் நுழைந்தவள் கேட்ட கேள்வி அனைத்திற்கும் அழகாக பதிலளித்து அந்த கம்பெனியில் அவள் சேர்வதற்கான அங்கிகாரத்தையும் பெற்றாள்.

அவள் வெளியே செல்லவும் அவன் பின் தொடர்ந்தான்.

வாழ்த்துக்கள் மிஸ் மோகினி...

தன் பின்னே மிக அருகே கேட்ட குரல் முன்பே கேட்டது போல் இருக்கவும் திரும்பி பார்த்தவள் சற்று முன் தன்னை கேள்வி கேட்ட அந்த கம்பெனி மேனேஞ்மெண்டை சேர்ந்தவர் எனவும் சினேகத்துடன் புன்னகைத்தாள்.

அந்த புன்னகையில் தடுக்கி விழுந்தவனாய் அவளையே நோக்க அவள் ' தேங்க்ஸ் ' என்று சொன்ன ஒரு வார்த்தையே அவன் காதில் இன்னிசையாய் இசைத்தது.

தன்னை சுதாரித்துக் கொண்டவன் ' உங்க தலையில வலி எதும் இல்லையே ' என்றான் விஷம புன்னகையுடன்.

அவள் புரியாது நோக்கவும் ' நீங்க இடிச்ச இடியில என்னோட இதயம் பஞ்சர் ஆயிடுச்சு சீக்கிரமா ஆஸ்பத்திரி போய் பார்த்தா தான் தெரியும் எந்த அளவு சேதாரம் ஆயிருக்குனு ' என்று நெஞ்சை தடவிக் கொண்டு சோக முகத்துடன் அவன் பேசிய பாவனையில் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

அப்பொழுது தொடங்கிய பழக்கம் எப்படி காதலாகி உயிரோடு உயிரானார்களோ அவர்களுக்கே தெரியாது.

அவனுக்கு பெற்றோர்கள் இல்லை அவளது பெற்றோர் அவள் மனம் போல் வாழ வாழ்த்தினர்.

வாழ்க்கை மிக இனிதாகவும் அழகாகவும் போய் கொண்டிருந்த சமயம்-

அவன் வேலை நிமித்தம் வெளியூர் செல்ல, குல தெய்வம் கோவிலில் நேத்திகடன் செலுத்த தாய், தந்தையோடு காரில் சென்றவள் விபத்தில் மாட்டினாள். பெற்றோரை இழந்தாள். இடுப்பு பகுதியில் அடி படவே அதன் கீழ் பகுதி செயல் இழந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையானாள்.

தன்னால் அவனுக்கு எந்த சந்தோஷமும் கொடுக்க முடியாதே என வருந்தியவள் அவனுக்கென்று ஒரு வாழ்க்கையும் வாரிசும் வேண்டும் என தீர்மானித்து அவனிடம் பேசிய போது ' இதை பத்தி இன்னொரு தடவ பேசின நான் உயிரோடவே இருக்க மாட்டேன். உன்னை விட எனக்கு எந்த சுகமும், சந்தோஷமும் முக்கியம் கிடையாது. வாரிசும் தேவை கிடையாது எனக்கு எப்பவும் நீ மட்டும் தான் முக்கியம் நான் வாழ்றதே உனக்காக மட்டும் தான். அதனால நீ கண்டதையும் போட்டு மனச குழப்பிக்காத எப்பவும் சிரிச்ச முகமா சந்தோஷமா இரு அது போதும் எனக்கு. எப்பவும் உன்னோடவே தான் நான் இருப்பேன்' என்று அவன் அன்று கூறிய வார்த்தைகளை இன்று வரையும் கடைபிடித்தான்.

அவள் மனம் நோகாமல் நடந்து கொண்டான். அவளை பூ போல் தாங்கினான்.

இந்த 35 வருட வாழ்க்கையில் தன்னை ஓடி ஓடி கவனித்த தன் ஆசை கணவனின் முகத்தில் வயதான சாயல் இருப்பினும் அதையும் தாண்டி தன் மீது இருக்கும் ஆசையும் காதலும் நிரம்பி வழிவதைக் கண்டு சந்தோஷத்தில் அவள் இதயம் விம்ம கண்கள் ஆனந்த கண்ணீரை பொழிந்தது.

அந்த சந்தோஷத்தில் தன் அன்புக் கணவனை காதலோடு இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

எழுதியவர் : நித்யஸ்ரீ (15-Dec-16, 10:03 pm)
Tanglish : ennavan
பார்வை : 719

மேலே