கறுப்புப் பணத்தின் பதுக்கல் பெட்டகமா கோவில் --- நம் சிந்தனைக்கு
சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தைக் கண்டறிய அமைக்கப்பட்ட சிறப்புக் குழு சூலை 2015மாதம்
உச்சநீதி மன்றத்தில் கோவில்கள், மடங்களில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடைபெறுகிறது என்று ஆகஸ்ட் 2015 அறிக்கை ஒன்றினை அளித்தது- உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி ஷா தலைமையிலான புலனாய்வுக் குழு.
இப்படியொரு அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், கோவில்களுக்குப் பங்குப் பத்திரத்தைத் தானமாக தரலாம் என்று திருப்பதி கோவில் தேவஸ்தானமே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது என்றால், இந்த வெட்கக் கேட்டை என்ன என்று சொல்ல!
முதன்முதலாக - இந்தியாவில் பெரிய கல் முதலாளி யான திருப்பதி கோவிலில் பங்கு வர்த்தகக் கண்காணிப்பு நிறுவனமே (Stock Holding Corporation of India Ltd) புதிய பங்கு வர்த்தகக் கணக்கைத் திறந்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரியது.
உலகத்தில் எந்த ஒரு நிறுவனத்தின் பங்குகளையும் கோவில்களுக்குத் தானமாக - அதிகாரப்பூர்வமாக அளிக்கலாம் என்றாகிவிட்டது.
இதுகுறித்துத் திருப்பதி கோவில் நிருவாகம் கூறுவதைக் கவனிக்கவேண்டும். பணம், தங்கம், நிலம் போன்றவை களுடன் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளும் தானமாகக் கொடுக்கப்படுவதோடு, பங்கு வர்த்தகப் பத்திரங்களையும் தானமாக, தாராளமாக வழங்கலாம்; அப்படி வழங்குகின்றவர்களின் பெயர்கள் வெளியிடப் படமாட்டாது; இரகசியம் பாதுகாக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிருவாகம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டது.
மத்தியப் பங்குப் பத்திர சேமிப்புத் துறை நிறுவனம் திருப்பதி தேவஸ்தான தலைமைக் கணக்கரான டி.சாம்பசிவத்திடம் திருப்பதி ஏழுமலையான் கோவில் பெயரில் தொடங்கப்பட்ட தொடங்கப்பட்ட பங்குப் பத்திர வர்த்தகக் கணக்குக் குறித்து கடிதமும் மற்றும் அதற்கான வழிமுறைகளையும் ஒப்படைத்துள்ளது.
அதாவது கணக்கில் வராத கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துக்கொள்ள வெளிப்படையாகவே அதிகாரப் பூர்வமாக வழிவகை செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 25 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஷா தலைமையிலான குழுவான் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,
மடங்கள் மற்றும் கோவில்களில் புழங்கும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த சரியான வழிமுறைகள் சட்டத்தில் இல்லை. இதனால் அங்கு கறுப்புப் பணப் புழக்கம் அதிகமாக உள்ளது. சட்ட விரோதமாக செய்யப்படும் வணிகத்தின்மூலம் வரும் கறுப்புப் பணம் போலியான ரசீதுகள் மற்றும் நன்கொடை ரசீதுகள் மூலம் மடங்களுக்கு வந்து சேர்கிறது. அதேநேரத்தில் பல்வேறு போலி வணிக நிறுவனங்களின் பெயரில் 2,70,000 கோடி ரூபாய் கேமரூன் தீவுகள், மொரீசியஸ், பர்முடா போன்ற நாடுகளுக்குச் சென்று பிறகு அவை டாலராக மாற்றப்பட்டு அயல்நாட்டு வங்கிகளில் போடப்படுகிறது.
அதன் பிறகு அங்கிருந்து இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடாக போடப்படுகிறது. இந்தக் கறுப்புப் பணப் பரிமாற்றத்திற்கு என்றே பல போலி நிறுவனங்களை அயல்நாடுகளில் சிலர் ஆரம்பித்துள்ளனர். கோவில், மடங்கள், கிரிக்கெட்டை அடுத்து மத அமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் அதிக அளவு கறுப்புப் பணம் புழக்கத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ள நிலையில் கோவில்களில் நேரடியாக பங்கு வர்த்தகம் தானம் என்ற பெயரில் வாங்கப்படுவது, கோவில்களில் கள்ளப்பணம் எளிதில் நுழைய வழிவகுத்து விடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் பக்தி செலுத்தவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும்தான் கோவில்கள் என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும், கோவில் என்பது முழுக்க வியாபார நிறுவனம் ஆகிவிட்டது - சுரண்டல் கூடாரமாகி விட்டது. கறுப்புப் பணத்தை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவது ஒருபுறம் இருக்கட்டும்; இப்பொழுது உள்நாட் டிலேயே கோவில்கள் கறுப்புப் பணத்தின் புகலிடமாக பெட்டகமாக ஆகிவிட்டதே - மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?
கோவில்களில் உள்ள தங்கத்தை வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு கருத்து - இன்றைய மத்திய அரசின் வாயிலாகக் கொஞ்ச நாள்களுக்குமுன் கசிந்தது. ஆனால், அதற்குப்பின் அதைப்பற்றிய மூச்சுப் பேச்சு இல்லை.
இப்பொழுது மேலும் கறுப்புப் பணம் மூட்டை மூட்டையாகப் பெரும் பணம் கோவில்களில் குவியப் போகிறது. இவற்றால் காதொடிந்த ஊசிமுனை அளவுக்காவது மக்களுக்குப் பயனளிக்கப் போவதில்லை.
மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? மக்கள் நலனை முன்னிறுத்தி, கோவில்களில் குவியப் போகும் கறுப்புப் பணத்தைத் தடுக்கும் வழியில் ஈடுபடப் போகிறதா? (இதற்குள்ளாகவே ரூ.5 லட்சம் மதிப்புள்ள பங்குப் பத்திரங்கள் குவிந்துவிட்டனவாம்) அல்லது நாங்கள் இந்துத்துவாவாதிகள் - கோவில் விஷயத்தில் மூக்கை நுழைக்கமாட்டோம் என்று சொல்லப் போகிறதா? எங்கே பார்ப்போம்!
விடுதலை மக்களுக்கு கிடைக்கட்டும்
.