மாதங்களில் நான் மார்கழி

‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ண பரமாத்மாவால் முன்மொழியப்பட்ட மாதம் மார்கழி. வாழ்வின் சின்னச் சின்னச் செயல்களிலும் கடவுளைச் சென்றடைவதற்கான வழியும் இணைந்தே இருக்கிறது என்பதை மார்கழி மாதம் உணர்த்திவிடும்.

மார்கழியைப் பீடை மாதம், இந்த மாதத்தில் சுபநிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சிலர் சொல்லலாம். அந்தக் கூற்று தோற்றியதன் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒருநாளின் ஒவ்வொரு மணித்துளியும் இறைவணக்கத்துக்கு உகந்தது என்றாலும் குறிப்பிட்ட நாழிகைகளை மட்டும் இறைவனுக்கென்றே ஒதுக்கியிருப்பார்கள். அதிகாலை நான்கு முதல் ஆறு மணி வரை இறைவணக்கத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட நேரம். அதேபோல சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரையுள்ள நேரமும் இறைவணக்கத்துக்கு உகந்ததே. கதிரவனின் அஸ்தமனத்தைவிட புள்ளினங்கள் கவிபாடி உலகத்தைத் துயிலெழுப்பும் அதிகாலை, அற்புதமானது. மனதில் சலனங்கள் ஏதுமின்றி இறைவனோடு ஒன்றுவதற்கு ஏற்ற பொழுது, இதைவிட வேறென்ன இருக்கமுடியும்? அதனால்தான் அந்த அதிகாலைப் பொழுதை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று முதன்மைப்படுத்தினார்கள்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. அந்த மாதத்தில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதேநேரம் இறைவனிடம் மனம் ஒன்ற வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

மார்கழியின் பனியைப் போலவே பாவை நோன்பும் பரிசுத்தமானது. நல்ல இல்வாழ்க்கை வேண்டி கார்மேக வண்ணனை நோக்கி இருக்கும் நோன்பு இது. நோன்பு நாட்களில் என்னென்ன செய்ய வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று திருப்பாவையில் பட்டியலிடுகிறார் ஆண்டாள். மார்கழியின் காலைப்பொழுதை அவர் வர்ணிக்கும் விதமே அலாதியானது.

“பறவையினங்கள் பாடத் தொடங்கிவிட்டன. கோயிலில் எழும் வெண்சங்கின் சத்தம் கேட்கிறது. ஆனைச் சாத்தன் எனப்படும் வலியன் குருவிகள் கீசு கீசு என்று சத்தமிடுகின்றன. நறுமண மலர்களைக் கூந்தலில் சூடியிருக்கும் ஆயர்குலப் பெண்கள் மத்தால் தயிர் கடையும் ஒலி கேட்கிறது. கீழ்வானம் வெள்ளென்று புலர்ந்துவிட்டது. மாடுகள் தங்கள் சிறுவீட்டில் இருந்து வெளியேறி மேய்ச்சலுக்குக் கிளம்பிவிட்டன. வீட்டின் புழக்கடையில் இருக்கும் சிறுகுளத்தில் செங்கழுநீர் மலர்கள் இதழ்விரித்துவிட்டன. ஆம்பல் மலர்கள் கூம்பி தலைசாய்த்து நிற்கின்றன” இப்படியாக நீள்கிறது அதிகாலையின் வர்ணனை. படிக்கும்போதே மார்கழிப் பனியில் நனைந்தபடியே ஆயர்குலத் தோழியின் வீட்டுவாசலில் நிற்பது போலத் தோன்றும். மற்ற எந்த மாதங்களையும்விட மார்கழி சிறந்தது என்பதற்கு அதன் அதிகாலைப் பொழுதே ஆதாரம்.

அதிகாலையில் எழுந்து நீராடி, வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது. மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபடுவதும் நடக்கும். மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டுவார்கள். வரட்டிகளாக தட்டியதை சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.

மார்கழியில் அதிகாலை துயிலெழுவதும், வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் நல்லவண்ணமாய் இருக்கும். அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வன்மைப்படுத்தும் மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரையும் வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.

மார்கழியில் சுபநிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. குடியானவர்கள், தை மாதத்தில் வருகிற பொங்கலுக்குத் தேவையான தானியங்களையும், கரும்பு, மஞ்சள் முதலான பொருட்களையும் அறுவடை செய்து வீடுகளுக்குக் கொண்டுவரும் பணியில் மார்கழி மாதம் முழுவதும் செலவிடுவார்கள். அதனால் அந்த மாதத்தில் சுப நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சுபநிகழ்வுகளைத் தவிர்த்த மக்கள், இறைவழிபாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்கியிருப்பதும் இந்த மார்கழி மாதம்தான்.

மார்கழியின் மகத்துவம் பனியிலும் அதன் ஊடாக வியாபித்திருக்கும் இறைவணக்கதிலுமே அடங்கியிருக்கிறது.

பிருந்தா சீனிவாசன்

எழுதியவர் : (17-Dec-16, 6:45 am)
பார்வை : 181

மேலே