டிரக்கியோஸ்டமி சிகிச்சை என்றால் என்ன
நடப்பு டிசம்பர் மாதத்தில் திமுக தலைவர் கருணாநிதி இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறலால் அவதிப்படும் அவருக்கு டிரக்கியோஸ்டமி சிகிச்சை அளித்து வருவதாக காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
டிரக்கியோஸ்டமி சிகிச்சை என்றால் என்ன?
மருத்துவத்துறை வெகுவாக முன்னேறிவிட்டாலும், இன்றும் டிரக்கியோஸ்டமி மிகவும் சிக்கலான சிகிச்சைதான். மூச்சுத்திணறலால் அவதிப்படுவோருக்கு இறுதி முயற்சியாக டிரக்கியோஸ்டமி சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மூக்கு அல்லது வாய் வழியாக சுவாசிக்க முடியாதவர்களுக்கு, தொண்டையில் துளையிட்டு, சுவாசக் குழாயில் டியூபை சொருகி செயற்கையாக நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜனை செலுத்தும் முறையே டிரக்கியோஸ்டமி சிகிச்சை ஆகும்.
இந்த முறையில், தொண்டையில் குரல் வளைக்குக் கீழே துளையிட்டு, சுவாசக்குழாயில் டியூப் செருகப்படும். டியூப்புடன் இணைக்கப்பட்டுள்ள கருவி மூலம் சுவாசக்குழாய் வழியாக நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜன் செலுத்தப்படும். குளுக்கோஸ் செலுத்த வசதியாக, நோயாளியின் கையில் நிரந்தரமாக டியூபை செருகிவிட்டு, ஊசி வழியாக மருந்து செலுத்துவது போல, டிரக்கியோஸ்டமி சிகிச்சை செய்யப்பட்டவருக்கு தொண்டையில் டியூப் ஒன்று நிரந்தரமாக பொருத்தப்பட்டிருக்கும். ஆக்சிஜன் கருவியுடன் இணைக்கப்பட்ட சிறிய டியூபை தொண்டையில் நிரந்தரமாக பொருத்தப்பட்டிருக்கும் டியூபுடன் பொருத்தி ஆக்சிஜனை நுரையீரலுக்கு நேரடியாக செலுத்துவார்கள்.
கிருமித்தொற்று ஆபத்தை தடுக்க, தொண்டையில் துளையிட்டு பொருத்தப்பட்டிருக்கும் டியூபை 10 முதல் 14 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் மாற்றுவார்கள். மூச்சுத்திணறல் நிரந்தரமாக குணமாகி, டிரக்கியோஸ்டமி செய்யப்பட்டவரால் இயல்பாக சுவாசிக்க முடியும் பட்சத்தில், தொண்டையில் பொருத்தப்பட்டிருக்கும் டியூப் நீக்கப்படும். தொண்டையில், அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கான சிறிய தழும்பு மட்டுமே எஞ்சியிருக்கும். டிரக்கியோஸ்டமி நிலை சிலருக்கு நிரந்தரமாவதும் உண்டு.
நன்றி: புதிய தலைமுறை.