இதுவும் முன்னேற்றமே

எனது தேசம்
முன்னேறி வருகிறது
உடுத்தும் உடையிலிருந்து
உயிர்போகும் கல்லறைவரை...

அன்று...
கூட்டுக்குடும்பமாய்
குடியிருந்த நாங்கள்...

இன்று...
தனிக்குடும்ப தகுதிபெற்று
ஆளுக்கொரு வீரென்ற
அவதாரம் கொண்டோமே...!

அண்டை நாடுகளின்
அடுத்தடுத்த படைப்புகண்டு
உள்ளம் கொதிப்படைந்து

நாளுக்கொரு கோவிலென்ற
நாகரீகம் பெற்றோமே...

நாடே வீடென்ற
நாடுகளுக்கிடையே
வீதிக்கொரு சாதியென்று
விதிபிரித்தோமே...

அங்கம் மறைத்த
எம்குல மங்கைக்கு
ஆடை சுருக்கியல்லாவா
சிக்கனம் கற்றோம்

அட்டா..!
என்னநம்
பொருளாதாரச் சிக்கனம்

அன்று
உபச்சாரம் செய்த
எனது தேசமே..!

இன்று
விபச்சாரம் செய்து
பிழைப்பது ஏன்.?

இதுதான்
எங்களின் முன்னேற்றம்..

இதுதான்
எங்களின் பண்பாடு..

இதுதான்
எங்கள் முன்னோர்
விட்டுச்சென்ற அறநெறி

அன்று...
கண்ணகி வாழ்ந்த
நமது தேசத்தில்..

இன்று...
கண்ணகி சிலைகண்டு
காமங்கொண்டோமே...

ஆணுக்கு பெண்ணென்ற
சமத்துவம் கேட்டு அங்கங்கு வெடிக்குதே
ஆபாச வேட்டு...

வருடம் இருமுறை
கொடியினை ஏற்றி
ராகத்தில் பாடுவோம்
தேசியம் போற்றி...

கல்விதான் எங்களின்
கண்ணென்று கூவி
விற்பனை செய்வாரே
விளம்பரந்தூவி...

இதுதான்..
எங்களின் தேசம்
இதுதான்
எங்களின் வளர்ச்சி

கருப்புபணம் பதுக்க
கல்வியும் கற்றோம்
லஞ்சம் கொடுப்பதற்கு
லஞ்சமும் பெற்றோம்...

அன்று..
அடுக்கடுக்காய்
குழந்தை பெற்று
அன்புடனே வாழ்ந்தோமே..

இன்று...
கோடிகோடி
ஊழல் செய்து
என்ன கொண்டு சென்றோம்...

இதுதான்...
எங்களின் தேசம்

இதுதான்...
எங்களின் சுவாசம்

பாதியிலே வந்தவரே.!
நீதிஒன்று கூறும்

சேரிமக்கள்
தாண்டிதானே
உண்ணுகின்ற சோறு..

நீதியென்றும்
நேர்மையென்றும்
சொன்னவரே கேளும்..

போற்றிகின்ற
நீதியெல்லாம்
நிதியிடத்தில் சேறும்..

இந்த..
எண்ணம் மாற்றி
நீ உழைத்தால்
விண்னைத் தொடும்
நாடும்...

எழுதியவர் : பா.முப்படை முருகன் (18-Dec-16, 8:21 am)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : ithuvum munnetrame
பார்வை : 130

மேலே