அப்பா
![](https://eluthu.com/images/loading.gif)
பெத்தெடுத்த பிள்ளையை தாய் அவள் காட்ட
பக்குவமாக தூக்க தகப்பன் நீ கை நீட்ட
சுத்தியுள்ள சொந்தங்கள் "பெண்" தான் என ஒரு புறம் இகழ
என் பிஞ்சு விரல்களை பிடித்து முத்தமிட்டு நீ மறுபுறம் மகிழ
வயிற்றுக்கே உரம் இன்றிய போதிலும்
பொட்டிக்கடையில் சிறுதீணிக்கு கணக்கு வைத்தும் கொடுத்தாய்
சண்டையிட்ட போதிலும் மண்டியிட்டு மன்னிப்பும் கேட்டாய்
விழும் முன்னே எழ பயிற்சி கொடுத்தாய்
இராப்பகலாய் வேலைச் செய்து கல்யாணத்திற்கு நகையும் சேர்த்தாய்
வாசற்படியை தாண்டி ஊரை பார்க்க ஏங்கும் பெண்டிர் ஒரு புறம்
இராத்திரி கூடையை கொடுத்து முட்டை வாங்க அனுப்பும் உன் தைரியம் மறுபுறம்
முத்தங்களின் எண்ணிக்கை குறைய
உன் தலை மயிரில் வெள்ளை நிறைய
பட்டுப்பாவாடை பட்டுத்தாவணியாக மாறி தனி அறை நான் புகும் போது
ஒரு பிரிவுக்கு உனக்குள் ஒத்திகை பார்த்தாய்.
என் செய்து என் கடனை அடைப்பேன் ஐயா?
நம்மை தெய்வம் காக்குமானால்
என்னை காக்கும் என் கண்கண்ட தெய்வம் நீயே அப்பா!!