மனப்பக்குவம்

ஆசைப்படுவது இயல்பு - அதில்
அர்த்தம் காண்பது மரபு.

கண்ணில் காணும் காட்சியெல்லாம்
இனிக்கத்தான் செய்யும்;
எதற்கும் ஒரு எல்லையுண்டு என்பதை
அறிவது தான் மாண்பு.

அளவுடன் உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது - அதேபோல்
ஆர்வத்திற்கும் சுயதடை செய்வது சாலச்சிறந்தது.

என்னை உன்னை ஏற்றம் இறக்கத்துடன்
படைத்தானே இறைவன், அவனுக்குத்தெரியும்
அந்த ஏற்றம் இறக்கம் ஏன் என்று!

அதைப்புரிந்து அந்த இடைவெளியை குறைக்க
நம்மால் முடிந்தால் அதுவே வாழ்வின் வெற்றி.

வாழ்க்கை ஒரு பள்ளத்தாக்கு தான் - பல்லாக்கு
என்றிங்கே பலபேர் நினைப்பது தவறு.

ஓடும் ரயிலில் ஏறி சொகுசாய் பயணம் செய்ய
நம் குடும்பம் எப்போதும் ரிசர்வேசனில் இல்லை.

அதிர்ஷ்டம் ஆருடம் ஆன்மீகம் வசப்பட்ட
வாழ்க்கை தான் அவரவர்க்கு வாய்த்தது.

அதில் பயணம் செய்ய வழிகள் நூறு - அந்த
நூற்றிலும் சேரும் சகதியும் கூடுவது விதி.

அந்த விதியை வெல்ல பக்குவம் வேண்டும்
மனதுக்குள் அதை வேக வைத்தால் சுடும்
சூடானது சில நாள் பொறுமைக்குப்பின் குளிராகும்.

எல்லா உழைப்பும் உழைப்பல்ல உதவாத
உழைப்புடன் உயராமல் ஏழைகள் இங்கே ஏராளம்.

பணமென்றால் சுகமென்று யார் சொன்னது,
பணத்திற்கும் பாவத்திற்கும் ஒரே வழிப்பாதை என்பது
பாடம் பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.

காசு பணம் துட்டு என்று அந்தி முதல் சந்தி வரை
ஓடி ஓடி ஓடாய் தேய்வது வாழ்க்கையே இல்லை,
அங்கங்கே சண்டை சச்சரவு என்று மனம் தாங்கினால்
காலம் தீரும் கவலை தீருமா?

எதையும் எடைபோட்டு பாருங்கள்
எதற்கு இத்தனை கஷ்டம் என்று
எப்படி இதிலிருந்து தப்புவதேன்று

பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு வாழ்வில் சின்னச்சின்ன
தீர்வுகள் தான் வைத்திருப்பான் இறைவன்,
அந்த சூட்சுமம் அறிய நாம் சரியான பயணம்
மேற்கொள்வது தான் நலம் பயக்கும்.

மந்திரத்தால் இங்கே மாங்காய் விழாது தான்
தந்திரத்தால் தர்க்கத்தால் தாறுமாறாய் யோசிப்பதை விட
சீரிய முறையில் செயலாற்ற பக்குவம் வேண்டும்
பார்ப்பதில் கேட்பதில் செய்வதில் சிறக்க வேண்டும்.

பொறாமை இயலாமை தாளாமையை தள்ளி வைத்து
அறியாமை ஆற்றாமை முயலாமையை முறியடித்து
முன்னேற இங்கே முனைப்பு வேண்டும் உறுதியுடன்
முயற்சியில் மகத்துவமில்லாது போகாது
என்கிற நினைப்பும் வேண்டும்
நெஞ்சில் உறுதியும் வேண்டும் - நினைவில்
கொஞ்சம் நேர்த்தியும் வேண்டும்.

எழுதியவர் : செல்வமணி (19-Dec-16, 8:38 pm)
பார்வை : 778

மேலே