புதுஉயிரை வரவேற்கும் வளைகாப்பு

ஆராரோ ஆரிராரோ... என தாலாட்டு பாட தயாராகும் என் இனிய அக்காவிற்கு ஒரு இனிய தொகுப்பு...

தொப்புள் கொடி உறவு இனி
தொட்டிலுக்குள் சிரிக்கும் என
சொல்லாமல் சொல்லுது இந்த
வளையோசை சத்தம் இன்று...

பால் மணக்கும் வாசம் இனி
வீடெங்கும் வீசும் என்று
உலகிற்கு உணர்த்தியது வெள்ளை
மல்லிகைப்பூ மாலை ஒன்று...

மஞ்சள் தன்னை பூசிப்பூசி
சிவந்தது ஏன் நங்கை முகம்?
சிவந்த இரண்டு பிஞ்சுப்பாதங்கள்
இங்கு பதியும் என்று கூறத்தான்...

சீலை தன்னைச் சீதனமாய்
கொடுப்பதன் நல்ல காரணமே
குட்டி மகராசன் துயில் கொள்ள
தொட்டில் தூரி அதைக் கட்டத்தான்...

தாத்தாவின் கோவம் எல்லாம்
இனி செல்லாமல் போகும் உன்னிடத்தில்
அவர் நெஞ்சின் மேலே உன்னைத் தாங்கையிலே
ஆயுள் கூடும் அவரிடத்தில்...

பாட்டியின் முந்தானைச் சேலை
உன்னைக் காக்கும் கோட்டை ஆகும்
கண்ணுக்குள்ளே உன்னை வைத்து வைத்து
பிறர் கண்ணுப் படாம பாதுகாக்கும்...

உன்னை தோல் மேலே வைத்து ஊரு சுற்ற
காத்திருக்கிறான் தாய் மாமங்காரன்
கேட்டதெல்லாம் வாங்கி தந்து
உன்னை சிரிக்க வைக்கும் பாசக்காரன்

அப்பா என்று நீ சொன்னா போது, அவருக்கு
உன் மழலை கூட இனிமை ஆகும்
உன் பிஞ்சுக்கரங்களில் முத்தமிடும்
அந்த தருணமே அவர் சொர்க்கம் ஆகும்...

பத்து மாதம் உன்னை சுமந்த பின்னே
இறக்கி வைப்பவள் இல்லை அவள்
இந்த உடலில் உயிர் உள்ள வரையில்
உள்ளத்தில் சுகமாக சுமப்பவள் அம்மா...

குட்டித்தங்கம் அது எட்டு வைத்து
வரும் வருகையை கொண்டாடும் தினம் இது....
வாரிசை வரவேற்க்கும் நிகழ்வு இது...

இந்நாள் போல் எந்நாளும் நந்நாளாய் அமைய,
தம் அனைவருக்கும் என் பொன்னான வாழ்த்துக்கள்.!!! அக்கா...!!!!!

எழுதியவர் : ரகுராம் ரத்தினம் (19-Dec-16, 9:33 pm)
சேர்த்தது : ரகுராம் ரத்தினம்
பார்வை : 11635

மேலே