சீர்திருத்தப் பாதையில் வள்ளலார்

தன்னுடைய புரட்சிக் கருத்துகளால் போட்டி,
பொறாமை, பொய், களவு, சூது போன்ற சமுதாயக் குறைபாடுகளால் நலிவுற்றுக் கிடந்த மக்களை முன்னேற்றப் பாடுபட்ட வள்ளலார்,

" ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர். ",
என்று வேண்டுகோள் விடுத்தார்..

" போதெல்லாம் வீணில் போக்கி ஏமாந்த
புழுத்தலைப் புலையர்கள். "
வாழும் வாழ்க்கையைக் கண்டு கலங்கினார்..

சாதி, மத பேதங்களால் நாளும் சண்டையிட்டு நாசமாகப் போகும் நாட்டுமக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த அரும்பாடுபட்டார்...

படித்தோரும் பண்படாத பாமர மக்கள் போல சிந்தனை சிறிதும் இல்லாமல் யார்யாரோ சொன்ன சொல்லை உண்மை என்று நம்பி கண்மூடித்தனமாக போலி வழக்கங்களைக் கையாண்டு வருவதைக் கண்டு, இருசாராருக்கும், அவையெல்லாம் மண் மூடிப்போக என்று மங்கலச் சாபமிட்டு,
மனம் நொந்த பண்பட்ட பகுத்தறிவுச் சிகரமாவார்...

ஆடு, கோழி, பன்றி போன்ற வாயில்லா ஜீவன்களை தெய்வத்தின் பெயரால் காவு கொடுப்பதைக் கண்டும், உணவு காரணமாகக் கொல்வதைக் கண்டித்தும் மனம் நொந்து, பதைபதைத்துத் திகைத்ததால், எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும் மனிதத் தெய்வமானார்..

பலவகை தெய்வங்களை நம்பி, " ஒன்றே குலம், ஒருவனே தேவன். ", என்பதை ஏற்க மறுத்துப் பொய்யினைப் போற்றி வீண் பொழுதைப் போக்கிடும் பழம்பசலிச் சோம்பேறிகளைக் கண்டு துடிதுடித்தார்...
இப்படிப்பட்ட பல்வேறு அவலச் சூழ்நிலையில்,
" ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுணர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும். " என்ற ஒருமைப் பாட்டுணர்வுடன் கூடிய ஏற்றத்தாழ்வில்லாத சமுதயாம் ஏற்பட்டால் தான் உலக மக்கள் துயரங்களிலிருந்து மீள முடியும் என்று அறிவுறுத்தினார்...

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டுவந்த அந்த நேரத்தில் அச்சமும், பேடிமையும், அடிமைத்தனமும் மலிந்து காணப்பட்ட மக்களிடையே,
" அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக ", என்ற தலைசிறந்த அரசியல் நீதி நெறியையும் உணர்த்திய சத்திய அரசு நெறியாளர் வள்ளலார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரோட பொருளாதாரச் சித்தாந்தம் மிகவும் போற்றத்தக்கது..

" தேட்டிலே மிகுந்த சென்னையி லிருந்தால்
சிறு குறும் என்னுளம் எனப் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப் புறங்களிலே
நண்ணினேன்..... ",
என்று பாடுவது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் காணச் சகிக்காமல் சமத்துவ நோக்கத்தோடு,
தூய உள்ளம், எளிய நேர்மையான எண்ணம் ஆகியவற்றைத் தனது சொத்துகளாகக் கொண்டு செயல்பட்ட கிராமப் புறங்களை நாடிய வள்ளலார், பொருளாதாரச் சமத்துவத்தையும் நாடிய ஒப்பற்ற பொருளாதார நிபுணர் ஆவார்...

" அருட் பெருஞ்சோதி,
தனிப் பெருங்கருணை. "

சொல்வது எல்லோருக்கும் ரொம்பச் சுலபம்.
ஆனால், சொல்லியபடி வாழ்ந்து காட்டுகிறவர்கள் இந்த உலகத்தில் ரொம்ப அபூர்வம்...
நம் வள்ளலார் வழியே தனிவழி.
அவர் சொன்னதைச் சொன்னபடியே வாழ்ந்துக் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியாளர்...

வள்ளலாரின் தனிச்சிறப்புகள்:-

* தமது கொள்கைக்கென்று ஒரு தனிமார்க்கத்தைக் கண்டவர்.

* தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச்சங்கத்தை நிறுவியவர்..

* தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிக்கொடி கண்டவர்...

* தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனி மந்திரம் கண்டவர்....

* தமது தனிமந்திர வழிபாட்டிற்கு ஒரு தனிச்சபையையும் கண்டவர்.....

* தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனி பத்திரிக்கையையும் தொடங்கியவர்......

இத்தகைய பேராற்றல் மிகுந்த ஞானியாகிய வள்ளலார் கடவுள் வழிபாட்டிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்...

வள்ளலார் முறையாக பள்ளிக்கூடம் சென்று படிக்காதவராயினும்,
அவர் ஓரிடத்தில்,

" கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
கருத்தர் திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன். ", என்றும், பிறிதோரிடத்தில்,
" கற்ற மேலவ ரோடுங் கூடிநில் லேன்கல்வி
கற்கும் நெறி தேர்ந்து கல்லேன். ", என்று மனம் உருகிப் பாடியுள்ளார்...

பள்ளிக்கூடம் போகாத வள்ளலார் கல்வி தொடர்பாக செய்துள்ள புரட்சிகளை பட்டியல் போட்டே காட்டலாம்..

1) உலகத்திற்கே பொது நூலாகப் போற்றப்படுகிற திருக்குறளை,
முதன்முதலாக வகுப்புகளை நடத்தி பொதுமக்களுக்குப் புரியும்படி போதனை செய்தவர் வள்ளலார்தான்..

2) இன்றைக்கு அரசாங்கம் செயல்படுத்தும் முதியோர் கல்வித் திட்டத்திற்கு முதன்முதலாக பாடசாலை நிறுவி வழிகாட்டியவரும் நம் வள்ளலார்தான்...

3) தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் ஒன்றாகப்படிக்க,
மும்மொழித் திட்டத்தை, " சன்மார்க்கப் போதினி (1867), சமரச வேத பாடசாலை, " என்ற இரு பாடசாலைகளை ஏற்படுத்திச் செயல்படுத்தியவரும் வள்ளலார்தான்....

4) நம்முடைய பழங்காலப் பெருமைகளையும், வரலாற்றையும் பறைசாற்றும் கல்வெட்டுகளை ஆராயத் தொடங்கிய தமிழ்ப் பெரியாரும் அடிகளாரே ஆவார்...

5) இன்று நடைபெறும் சத்துணவுத் திட்டத்தை அன்றே தொடங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கவும், வசதியற்ற பெற்றோர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் திட்டம் வகுத்தவர் வள்ளலாரே ஆவார்...

வள்ளலாருக்கு உள்ள இன்னொரு பெருமை என்னவென்றால் அவர் மனித சமுதாயத்திற்குப்
பேராசானாக விளங்கியது தான்...
ஆசிரியர் என்றால் ஏதோ ஒன்று அல்லது இரண்டு துறைகளில் அல்ல...

1) நூலாசிரியர், 2) உரையாசிரியர், 3) போதகாசிரியர், 4) ஞான ஆசிரியர், 5) பதிப்பாசிரியர், 6) பத்திரிகையாசிரியர் என்று ஆறுவகைத் துறைகளில் ஆசிரியராகத் தனிமுத்திரை பதித்துள்ளார்....

இவ்வாறு சீர்திருத்தப் பாதையில் உயர்ந்து, நமக்கெல்லாம் வழிக்காட்டிய அவ்வள்ளலார் பெருமானின் சிறப்புகளை இச்சிறு கட்டுரையில் கூறிவிட இயலுமா என்ன???...

இருப்பினும் அவரை நினைவுகூரும் சிறு முயற்சியில் இக்கட்டுரையை எழுதி உங்களின் முன் சமர்ப்பிக்கிறேன்...

கொள்கைரீதியிலும் சரி, செய்கைரீதியிலும் வள்ளலாரை மிகவும்
பிடிக்கிறது என் மனதிற்கு...
ஆதலால், அவரைப் பின்பற்றி வாழ்கிறேன்..

வள்ளலாரைப் பின்பற்றினால் நல்லதொரு மனித சமுதாயத்தை அமைக்க
இயலுமென்று மனதார நம்புகிறேன்.....

நன்றி சகோதர, சகோதரிகளே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Dec-16, 11:02 pm)
பார்வை : 630

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே