இறைவனின் சிரிப்பு

வெள்ளை வேட்டி,
தோளில் மடித்து தேய்த்த துண்டு,
வெற்றுடம்பில் தொங்கும் பூணூல்,
நெற்றியிலே..மூன்று விரலால் போட்ட திரு நீறுடன்,
தரையில் அமர்ந்து ,
ஈக்கிகுச்சி உதவியுடன்
ஆல இலைகளைக் கோர்த்து
இலை பின்னும் தாத்தா.

வெள்ளை வேட்டி,
வெளிர் ஊதாவில் சட்டை,
முக்குக் கண்ணாடியுடன்
மர நாற்காலியில் அமர்ந்தபடி,
பொன்னியின் செல்வன் படிக்கும் அப்பா,

நெற்றியிலே வட்ட குங்குமம்
தலையில் சிறிது மல்லிகைச் சரம்,
அடுப்பில் சோறு கொதிக்க
அடுக்களையில் அமர்ந்தபடி
அரிவாள்மனையில் காய்கறி நறுக்கும் அம்மா,

தளர்ந்த ஈரக் கூந்தலின் முனையில்
முடிச்சிட்டு,
துடைத்துவிட்ட முகத்தில்,
புதிதாக ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் பொட்டுடன்
அம்மாவுக்கு உதவியாக என் மனைவி,

காதுக்கருகில் வானொலியைப் பிடித்து
தமிழ்ப் பாடலுக்காக அதன் காதை
திருகிக்கொண்டிருக்கும் தம்பி,

முகத்தில் நாளைய கனவுடன்
பட்டுப் பாவாடை தாவணியில்,
அண்ணன் வாங்கிக்கொடுத்த
கோலப்புத்தகத்தை கையில் வைத்து,
நாளை முற்றத்தில் போடப்போகும் கோலத்திற்கு
வெள்ளைத்தாளில் ஒத்திகை பார்க்கும் தங்கை,

இவர்கள் எல்லோரையும்
ஒருவரை ஒருவர் பார்க்க வைத்து,
எல்லோரின் முகத்திலும்
புன்னகையை வரவழைத்தது,
தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த
என் ஒரு வயது மகளின் 'களுக்'கென்ற சிரிப்பொலி.!

எழுதியவர் : ஒப்பிலான் மு.பாலு (23-Dec-16, 9:51 pm)
Tanglish : iraivanin sirippu
பார்வை : 106

மேலே