எண்ணினாயோ
கொட்டிய பெருமழையில்--சென்னையை
எட்டிய தூரம் வரை தேடுகிறேன்
மீண்டும் ஒரு பூம்புகாரைக்
கொண்டு செல்ல ஒத்திகையோ!
ஆனை இருந்தாலும், இறந்தாலும்
ஆயிரம் பொன்—மழை
வெள்ளமா வந்தாலும், வரண்டு போனாலும்
அழிவது மக்கள் உயிரல்லவோ!
கங்கையை சுமந்த சிவனைப்போல்
மழைவெள்ளம் சுமக்கும் சென்னை
கங்கை சிவனுக்குக் கட்டுபட்டாள்
மழை ஆட்டிபடைப்பது மக்களையன்றோ!
தண்ணீர் தட்டுபாட்டால்—நாளும்
தவித்து நிற்கும் தமிழக மக்களை
கொட்டி தீர்த்த மழையால்
கொன்று குவிக்கலாமோ!
ஊரை சுற்றி நீரிருந்தால்
தீவு என்று கூறலாம்
தமிழகத்தை நீருக்குள் ஆழ்த்தினால்
தலைமுழுக எண்ணினாயோ!