வெட்கம் உன்னிடம் வெட்கப்படும்
மஞ்சள் பூசிய சந்தன நிலவு...
கொஞ்சி சிரிக்கும் மாலை வெயில்...
பனித்துளிகள் கன்னக் குழியில் விழுந்து
பல்லாங்குழி ஆடுமழகில் பூவிதழ் ஆகிறாள்......
தொட்டால் சுருங்கும் இலைகள் போல
தொடாமல் அழகாய் முகம் சுழித்தாள்...
சுண்டு விரல் நகம் கடித்து
கண்கள் மயங்க எனைப் பார்த்தாள்......
கைவிரலின் வண்ணக் கோலம் மறந்து
கால்களின் விரலில் மௌன கோலமிடுகிறாள்...
கழுத்தின் மணியைக் கைகளில் எடுத்து
புதிதாய் எண்களைப் பயின்றிட விழைகிறாள்......
நாணம் கண்டு நாணல் சாய்கின்றது...
வானில் எதிரொளியாய் மின்னல் பூக்கின்றது..
இமைகள் இரண்டும் சிறகுகள் விரிக்கின்றது...
தேன்சிட்டாய் படபடவென பலமுறை துடிக்கின்றது......
பூக்களின் புன்னகையில் உலா போகிறாள்...
வெட்கத்தின் இலக்கியத்தில் விளையாடி வருகிறாள்...
குளிர்ந்த காற்றில் தேகம் நடுங்குகிறாள்...
பளிங்கு விழிகளால் என்னை விழுங்குகிறாள்......