காட்டுப்பூ

ஒரு காட்டுப்பூ
மலர்க்கண்காட்சியில்
இடம்பெறுவது போல
--அந்த எழுத்தும்
--கவிதையின் கடைவிரிப்பில்
--காட்சிக்கு வருகிறது
*
மீனுக்காய்க் காத்திருக்கும்
கொக்குகள் போல
--வேதனைகள் நம்மைவிட
--உயர்ந்து நிற்கின்றன

அம்மாவின் சேலை
பிள்ளைகளுக்கு
தாவணி ஆவதைப் போல
--அடுத்தவர்களின்
--அவஸ்தைகளும்
--அனுபவங்களாகின்றன

சொந்த தேசத்து
அகதிகளைப் போல
--உவம உருவக
--உத்திமுறைச் சிற்பங்கள் யாவும்
--கவிதையின் தேசத்திலிருந்து
--வெளியேற்றப்படுகின்றன

மெட்டில் சரிந்து வீழும்
சுரபேதங்களைப் போல
--மானுடத்தில் சரிந்துடையும்
--பூமியின் ராகம்

வண்ணங்கள் கூடி
வானவில் வரைவது போல
--வேதனைகளும் அனுபவங்களும்
--அவ்வெழுத்தின் நிறங்களாயின

அகதிச் சிற்பங்களும்
சரியும் ராகங்களும்
அவன் எழுத்தின் சந்தங்களில்
அடைக்கலம் தேடின

எல்லா தர்மங்களும்
ஒன்றென ஓதும்
காற்றின் இசையைப்போல
--ஏழை எளிய மக்களின்
--எல்லாக் கதை மீட்டல்களின்
--இசைக்குறிப்பு
--எழுதி வருகிறது
அந்த எழுத்து

நாளை மலராக்கி
தேனாய் அதில் சூல்கொண்டு
வாழ்க்கையை வண்டாக்கும்
--இறுகிய படிமத்தின்
--இறையிசை
அந்த எழுத்து

எனினும் ,
கவிதைக் கடைவிரிப்பின்
காட்சியிலிருந்து மறைக்கப்பட்ட
அவ்வெழுத்தைப் போலவே
--மலர்க்கண்காட்சியிலிருந்து
--அகற்றப்படுகிறது
--நீங்கள் முதலில் பார்த்த
--காட்டுப்பூ !
*
(கவித்தாசபாபதி, ம. பிரபு ஊட்டி, இணைந்து)
மீள்

எழுதியவர் : கவிதாசபாபதி (26-Dec-16, 4:42 pm)
சேர்த்தது : கவித்தாசபாபதி
பார்வை : 81

மேலே