ஞாயிறும் நாங்களும்
மார்புக்குள்
முகம் புதைத்து
கிடந்தவள் ஒரு முடி
பிடித்து இழுத்த போது
விசுக்கென விழித்தேன்...
கிறங்கிய பார்வையோடு
கடித்து விடுவது போல
பாவனை செய்து மெல்ல
எழுந்து போனாள் அவள்...
சற்று நேரத்தில்
காதோரம் கடித்தபடியே
பின்பக்கமிருந்து
கழுத்துக்குள் புதைத்திருந்த
முகத்தை தூக்கி காட்டி
கண்ணடித்து
எழுந்து சென்றாள் இவள்...
மீண்டும் நீட்டி, குறுக்கி
சுருண்டு படுத்தேன்...
போகையில் ஒரு கிள்ளு
வருகையில் ஒரு முத்தம்...
என, அந்த ஞாயிறை
எழுப்பியபடியே
தேநீர் கொண்டு வந்தவள்,
மடியில் அமர்ந்து கொள்ள,
அதற்குள் ஓடி வந்து
முதுகு கட்டிக் கொண்டு
ஊஞ்சல் ஆடினாள்
இன்னொருத்தி....
பெயர் மாற்றி அழைத்து
வழக்கம் போல்
அசடு வழிந்த நான்
மீண்டும் போர்வைக்குள் சுருள...
இம்முறை இடம் மாறிக்
கிடந்தார்கள்
செத்தவளும் இருப்பவளும்......
கவிஜி