வெளிநாட்டில் எஸ்பிபி 50 என்ற பெயரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியைப் பற்றி வீடியோ பதிவு
திரையுலகில் பாடகராக 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அப்போது, வெளிநாட்டில் 'எஸ்.பி.பி 50' என்ற பெயரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியைப் பற்றி வீடியோ பதிவு ஒன்றைத் திரையிட்டார்கள்.
இச்சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அங்கு எஸ்.பி.பி குடும்பத்தினர், யேசுதாஸ் மற்றும் அவருடைய மனைவிக்கு பாத பூஜை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் "பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. 50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாகப் பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஷ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள்.
என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடகர் முஹம்மது ரஃபி. அவருக்குப் பிறகு எனக்கு மிகவும் நெருக்கம் என் அண்ணா ஸ்ரீயேசுதாஸ் தான். அவருடைய ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. என் குரு யேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்தும்விதமாக நான் பாத பூஜை செய்தேன். அவர் ஒரு ரிஷி, யோகி. அவருக்கு மாதிரி ஒரு குரல் கிடைப்பது பூர்வஜென்ம புண்ணியம்.
நான் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளாமல், சினிமாவுக்கு பாட வந்தேன். என் தாய்மொழி இசை. 16 அல்லது 17 வயது இருக்கும்போது, ஒரு மேடை கச்சேரியில் பாடினேன். அப்போது என் பாடலை கேட்டு, ஜானகி அம்மா, ‘‘நீ சினிமாவுக்கு வந்தால் பெரிய பாடகராகிவிடுவாய், முயற்சி செய்’’ என்று சொன்னார். அப்படித் தான் சினிமாவில் முயற்சி செய்து பாடகரானேன்.
அதனைத் தொடர்ந்து என்னை விட பல சீனியர் பாடகர்கள் நான் வளர்வதற்கு பெரும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இப்போதும், எனக்கு மைக் முன்னாடி எப்படிப் பாடுகிறேன் என்று கேட்டால் தெரியாது. ரஜினி, கமல், அனில் கபூர் உள்ளிட்ட பலருக்கு தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறேன். எனக்காக பலரும் வேடங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். சில நல்ல கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறேன்.
நிறைய தயாரிப்பாளர்கள், நான்தான் பாட வேண்டும் என பாடல்கள் கொடுத்தவர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசைக்கருவி வாசித்த எத்தனையோ நல்லவர்கள், பதிவு செய்தவர்கள், நன்றாக நடித்த நடிகர்கள் மற்றும் இசையைக் கேட்டு ரசித்தவர்கள் என அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.