கனவே கலையாதே
அன்றையபொழுது அவளுக்கானதாய்
அவளுடனான அவளறிந்திடாத எனது பயணம்...
எங்கு செல்கிறாளென எனக்கும் தெரியாது
ஏவாள் அவள் பார்வையில் சிக்காதுதான் பின்தொடர்ந்தேன்...
அவணியில் கண்டிடாத அழகுப் பதுமையவள்
அன்றுவரை அவள் எங்கிருந்திருப்பாள்...?
வளம்பெற்ற விளைநிலத்தை பிழைக்கவழியின்றி விலைக்குவிற்று
குடிக்கு அடிமைப்பட்ட கடைகோடித் தெருவோரக் குடிசைவாழ் குடிமகன் ஒருவனின் ஒற்றைவம்சக் கொடிதான் இவள்...
தாங்கல் அருகே தரிசுநிலம் ஏராளம்
தண்ணீயின்றி அங்கு என்னதான் விளைந்துவிடும்?
கோவில் மாணியமென குத்தகைக்கு எடுக்க
விளையாத களர்நிலம் விவசாயத்திற்கு உதவிடுமா...?
பிறந்தவீட்டு சீர்வரிசைகளை கணவனுக்கு தாரைவார்த்துவிட்டு
கண்கண்ட தெய்வமென காலடியிலேயே காலம்கடத்தியவள்தான் இவளது அன்னை கண்ணம்மா...
கடைகோடி வாழ் அத்தலைமகன் மதுவிற்கு இறையாகி மடியும் தருவாயில் உதித்தவள்தான் இந்த மாதவி...
"வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியொன" வாழ்ந்து முடித்தவன்
வக்கரையாய்தான் சொன்னான்...
வானும் பொய்த்துவிட இன்று
தானும் பொய்த்துவிட்டாளே காவிரி...
ஊரோர ஊருணியில் பருகும் நீரெடுக்க சென்றவள்
குண்டுக்குள் மண்குடம் கவிழ்த்து நன்நீரெடுத்து திரும்ப...
அவ்வழிதங்கிய அகழியில் அவளிறங்கி நீராடி அங்ககம் நனைக்க
அதைக்கண்ட வண்ணமீண்களிடமிருந்து அவளும் போராடிக் கரைசேர...
கண்மாய் கரையோரம் மேய்ந்த காளைகளெல்லாம் கொக்குகளாய் உருவெடுத்து
கொத்திச்செல்ல காத்திருக்கிற்றது இக்கோலமயிலை...
இலஞ்சிக்கரையை இவள் கடந்தபோது இடுப்புசேலை நழுவியதைக்கண்ட இளங்காளை பஞ்சுமேனி தேகத்தவளை பாழாக்க நினைக்க...
நெறிஞ்சிமுள் காலில்குத்த நெளிந்தவனைக் கண்டு
கருவாச்சி இவள் வீசிய கடும் பார்வைக்கு அஞ்சி
நெருப்புதானென உறுதிசெய்து நெருங்காது தொலைவில்சென்றான்...
கலிங்கிற்கு கட்டுபடாத காட்டுவெள்ளத்தில் சிக்கி
விதியின் விளிம்பில் தொலைந்திட்ட காதலனின் நினைவுகளுக்கு அஞ்சியவள்...
மடுவரை செல்லத் துணிந்தாள் தனதுயிரை மாய்த்துக்கொள்ள
எப்படிநான் காப்பாற்றுவேன் கலைந்த என் கனவிலிருந்து...