பெண்ணே பெரும் பேறே

பெண்ணே! பெரும் பேறே!
************************************
பெண்ணே! பெரும் பேறே !
இந்த
மண்ணின் தவமே !
மனிதரில் வரமே !
குழந்தையாய் சிரிப்பின்
குளிர் நீர் சுகமே

காதலில் பூவே
கடும்பனிக்காடே
மழையே !
மழை நிரப்பிய குளிர் குளமே !

இல்லம் தோறும்
அடுப்பையே உடுப்பாக்கி
அன்பைச் சமைக்கும் அன்னையே!

தோழமையாய், உறவாய்
ஈரமாய், தீரமாய்
மனக்கசப்புகளில் உரசும்போதும்
மணக்கும் சந்தனமாய்
மனதில் அப்பிக்கிடக்கும் அன்பினில்
மங்கையாய், தங்கையாய்

இப்படி...
குழந்தையாய், தாயாய்,
தமக்கையாய், தாரமாய்
பிறரால்
இட்டு நிரப்ப முடியா இடமாய்
இருக்கிறாய் ஆனாலும்,

வெடித்துக்கிடக்கும் விரிசல்களில்
சிறுக முளைத்த செடியாய்
வளர்ந்த குறு மரமாய்
இன்னும்கூட
எட்டிப்பார்த்து மார்தட்டிக் கொள்கிறது
உனக்கெதிரான
ஆண்களின் கெளரவம்.

- கரு. அன்புச்செழியன்

எழுதியவர் : கரு. அன்புச்செழியன் (6-Jan-17, 7:57 am)
பார்வை : 606

மேலே