சிறகுகளின் கனவுகள்

சாத்தியங்களுக்கு
அப்பாற்பட்டு கிடக்கிறது
சிறகடிக்கும் ஆசை

கற்பனையில் மட்டும் அவ்வப்போது
தீண்டி செல்லும்
கூண்டுடைத்த பறவைகளை
கெட்டியாக பிடிக்கும் விசயத்தில்
குழந்தைகள் என்னை விட
கெட்டிக்காரர்கள்

வானுயர பறக்கும் கனவுகள் எல்லாம்
விடிந்தும் திறவாத வாசலை
லாவகமாய் பெயர்த்தெடுத்து
ஓடிவிடும் திறமையான
திருடர்கள்

தொண்டைக் குழியிலிறங்கும் பிடிக்காத
உணவுத் துண்டை
கொடுத்தவர் திருப்திக்காக
தினம் விழுங்குவதே
வாழ்க்கையாகுமா ???

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வே
இறுதி கஷ்டம்
என நினைத்து படித்து முடித்த பின் வரும்
பன்னிரெண்டாவது தேர்வு போல்
தொடர்ந்து வரும் தேர்வுகளுக்கு
தயாராவதிலேயே வாழ்வும்
முடிந்து விடுமா ???

எதிலேயோ வசமாய் சிக்கிய விதத்திலேயே
செல்லும் இப்பயணம்
எதை நோக்கி நகர்த்துகிறது ???

மரத்தில் கட்டிய
கயிற்றோடு சுற்றிக் கொண்டிருக்கும்
பசுமாட்டின் உலகம் போல்
சமூகமெனும்
சற்றே நீண்ட கயிற்றில்
சிக்கி தவிப்பதே
நிலையாகுமா ???

சிறகுகள் கைகளானதன் நோக்கமே
கட்டிப் போடத்தான் போலும்
விசித்திரம் நிறைந்த உலகில்
மனிதன் மட்டுமே
பெரிதாய் கூண்டுகளை உருவாக்கி
அதனுள் மெத்தை அமைத்து
வசதியாக படுத்த படி
சுதந்திரத்தை கனவுகளாக்கி ரசிக்கிறான்


- கி.கவியரசன்

எழுதியவர் : கி.கவியரசன் (6-Jan-17, 12:25 pm)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 215

மேலே