இப்படியெல்லாம் இருந்திருக்கலாம்

இப்படியெல்லாம் இருந்திருக்கலாம் .









கொஞ்சம் பேசாமல் இருந்திருக்கலாம்
கொஞ்சம் தெளிவாக பேசியிருக்கலாம்

துணைநின்ற உறவுகளுக்கு உதவியிருக்கலாம்
தூரநின்ற உறவுகளை நிறுத்தியிருக்கலாம்

பூங்காக்களில் காத்திருத்தல் சுகமென்று அறிந்த நான்
புடவைக் கடையில் கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாம்

கருத்துச் சுதந்திரம் பற்றி பேசும் நான்-அவள்
கருத்தையும் கொஞ்சம் அறிந்திருக்கலாம்

அவள் கண் விழிக்கும் வேளையில்
ஒரு கோப்பை தேநீருடன் நின்றிருக்கலாம்

சண்டையிடும் நாட்களில்-என்
பிள்ளைகள் சுமந்த அவளை
பிள்ளைகளுள் ஒன்றாய் எண்ணியிருக்கலாம்

பள்ளியை விட்டு வந்த பிள்ளைகளிடம்
வீட்டுப்பாடம் தவிர்த்த வேறு நிகழ்வுகள்
விவரிக்கக் கேட்டிருக்கலாம்

கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு-
கூடா நட்பு பற்றியும் கொஞ்சம் அறிந்திருக்கலாம்

பசிப்பிணியால் அழுத நாட்களை
நினைவு கூர்ந்த வேளையில்
பிறர் பசி போக்க இன்னும் கொஞ்சம் உதவியிருக்கலாம்

இதையெல்லாம் வாழ்க்கையின்
பாதி கரைந்த நிலையில் யோசித்த நான்
இன்னும் முன்பே யோசித்திருக்கலாம்.


MULLAI RAJAN KAVITHAIGAL - முல்லை ராஜன் கவிதைகள்

எழுதியவர் : பூ.முல்லைராஜன் (8-Jan-17, 2:44 pm)
சேர்த்தது : mullairajan
பார்வை : 109

மேலே