பிரசவம் பெண்ணுக்கு மரண ஒத்திகை
உறவுகளே !
தாய் தந்தையரை
தவிக்க விடாதீர்கள் !
காதலர்களே !
வரம்பு மீறாதீர்கள்
குழந்தைகளை
குப்பைத் தொட்டிக்கு
கொடுக்காதீர்கள் !
கொச்சைப் படுத்த
வேண்டாம் தாயென்னும்
ஒப்பில்லா உன்னத உறவை !
'பிரசவம்' பெண்ணுக்கு
எமனோடு ஒரு யுத்தம் !
பிரசவத்தில் அவள் உயிர்
மதில்மேல் பூனை !
மொத்தத்தில் பிரசவசம்
பெண்ணுக்கு ஒரு
மரண ஒத்திகை !
மகவு மண்ணைத் தொட்டதும்
முடிந்திடாது அவள் உறவு !
தொப்புள் கொடியோடு
துண்டிக்கப் பட்டுவிடாது
அவள் தொடர்பு !
துறவியும் துறக்க முடியா
உறவு தாய் !
உன் மூத்திர நாற்றமே
அவள் சுவாசக் காற்று !
உன் உடல் வாசத்தில்
உன் உணர்வறிவாள் !
உன் பசி தீர்ப்பதிலே
தன் பசி மறப்பாள் !
உன் உடல் நோய்க்கு
தன் உயிர் பதைப்பாள் !
தூக்கம் தொலைப்பாள் !
நரை வந்துன்
சிகை நிறைத்தாலும்
நீ அவளுக்கு குழந்தைதான் !
ஆதலால் என்
அன்பானவர்களே !
கோவில் கட்டி
தாயை கும்பிடவேண்டாம் !
பாத பூஜையும்
புரிய வேண்டாம் !
அவள் குடலைப்
பசி தீண்டாதிருக்கட்டும் !
அவள் விழிகளில்
நீர் சுரக்காதிருக்கட்டும் !
அவள் உயிர்
விடைபெறும் வேளைகூட
இதழ்களில் புன்னகை
இழையோடட்டும் !
உன் வாழ்வும்
புனிதம் பெறும் !
வாழும் போதே
சொர்க்கம்
உனக்கு வாசல்
திறக்கும் ! ! !