உழைத்தால் எல்லாம் முடியும்

உழைத்தால் எல்லாம் முடியும் - உன்
உள்ளத்தின் சோம்பல் பொடியும்
நடந்தால் தடைகள் உடையும் - உன்
நலிவுக்கு கிடைக்கும் விடையும்

தோல்விகள் இன்றி வாழ்வில்லை - நீ
தோற்பது என்பதும் நிலையில்லை
தோற்றவர் மீண்டும் முயற்சித்து - அந்த
வெற்றியை அடைவது புதிதில்லை

வீழ்ச்சிகள் வருகின்ற நேரம் - நீ
விதைத்திடு நெஞ்சில் வீரம்
சோம்பலை துரத்திடு தூரம் – மன
சோர்வுகள் எல்லாம் தீரும்

மனம்போல் போகும் போக்கு - உன்
மகிழ்ச்சிக்கு ஆதுவே சீக்கு
பலத்தில் நீகடும் தேக்கு - உன்
பாழ்குணம் முழுதும் நீக்கு

அறிவுக்கு இல்லை எல்லை - அதை
அடைந்திட தடையெதும் இல்லை
அன்பே வாழ்வின் எல்லை - அதன்
அணைப்பினில் அனைவரும் பிள்ளை

சீறிடும் சிங்கம் நீயாகு - ஓர்
சிறுமையைக் கண்டால் தீயாகு
உழைப்புக்கு நீயே வேராகு - நீ
தழைத்தே வலம்வரும் தேராகு

தூங்கும் நிலையை மாற்று - தினம்
துடிப்பாய் செயல்களை ஆற்று
தடைகள் விலகிடும் தோற்று - உனை
தீண்டும் வெற்றிக் காற்று.

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (9-Jan-17, 5:26 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 57

மேலே