கதறல்
எவ்விதம் துவங்கட்டும்
நான் இக்கவிதையை???
எங்களின் துவக்கமே
இன்று கடைசியாகி
கொண்டிருக்கிறது...
பசி தீர்க்கும்
பண்டையத்தோர்க்கு
பஞ்சம் தீர்க்க
இன்று நாதியில்லை...
வாடிய பயிர்களை
காணவே அவர்களின்
இதயங்களில் வலுவில்லை...
மழைக்கு இதயமே இல்லை...
உண்மைதான்...
இருந்திருந்தால் கொஞ்சம்
ஈரம் சொட்டியிருக்கும்...
அண்டையினத்தவனே
அலட்சியப்படுத்துகிறான்...
ஆண்டவனோ வேடிக்கை
பார்க்கிறான்...
அவர்களை படைத்தவனும்
அவன்தானே...
உற்பத்தி செய்பவனே
விலை நிர்ணயிக்கும்
இவ்வுலகில்...
அறுப்பவனுக்கு மட்டும்
சாபக்கேடோ...
நாளை நாங்கள்
சோறுண்ண இன்று
பலர் மண் உண்டார்கள்...
இதுவே எங்களுக்கான
சாபக்கேடு...
வசதிகளின் மேல்
மோகம் கொண்டோம்...
கிராமங்களை விட்டொழிந்தோம்...
விட்டதினால் ஒளிந்துகொள்கிறோம்
பல வெற்றுடல்களின்
பின்னால்...
முதுகெலும்புதானே
என்றெண்ணி
வளைத்து கொண்டிருக்கிறோம்...
இன்றதனால் பல
உடைந்தே போனது...
ஒரு முழ பயிருக்கு
தண்ணீர் வேண்டி
ஒரு முழக்கயிற்றை
தேடிச்செல்லும்
அவல நிலை
நம் கிராமங்களில்...
இக்கவிதையின்
துவக்கத்தில் நான்
கொண்ட தடுமாற்றம்
முற்றுப்புள்ளி வைப்பதில்
இருக்கபோவது இல்லை...
நிறைவாகவே
நிறைவு செய்கிறேன்...
நதிகளை இணைத்துவிடுங்கள்...
என் ஒரு பிள்ளைக்கு
அவசியம்
ஒரு விவசாயி....