வாழும் கலைகள் - மரபு கவிதை

வாழ்கின்ற கலையாவும்
------ வாழ்ந்திடவும் வேண்டுமன்றோ?
தாழ்ந்திடாது கலையாவும்
------ தரணிதனை ஆளட்டும்
வீழ்ந்திடாது காத்திடுவோம்
------ வியன்பொருளாய் மாற்றிடுவோம்
ஆழ்ந்திடுவோம் பழங்கலைகள்
------ ஆறாகப் பெருகட்டும் .


கலைகளெல்லாம் சிறந்திடவும்
------ காசினியில் உயர்ந்திடவும்
விலைகொடுக்க முடியாத
------ விடிவெள்ளி பரதமன்றோ ?
மலைமலையாய் செல்வங்கள்
------ மகத்துவத்தின் வெளிப்பாடே .
சிலைசெய்யும் சிற்பங்களும்
------- சித்திரமும் கலையன்றோ ?


பரதத்தைப் பாரினிலே
------ பரவசமாய் நிலைநாட்ட
கரம்கொடுப்போம் வாரீர்காள்
------ கற்பனையும் கலையன்றோ
வரமாகி வந்தகலை
------- வளமனைத்தும் தந்திடுமே
விரதங்கள் கொண்டுநாமும்
------ விரைந்துமே பேணிடுவோம் .


செந்தமிழர் போற்றிடுவர்
------ செம்மையுற கலைதனையும்
பைந்தமிழில் வாழ்த்திடுவோம்
------- பசுமைகீதம் பாடிடுவோம்
அந்தநாளில் வாழ்ந்திட்ட
------- அற்புதமாம் நற்கலைகள்
இந்தநாளில் வீழாது
------- இன்பமுடன் காத்திடுவோம் .


ஏர்தழுவி வீரத்தை
------ எத்திக்கும் பறைசாற்றும்
பார்மிசையில் நம்கலையும்
------- பாங்காக வாழட்டும் .
சீர்மிகுந்த இவ்வுலகில்
------ சித்திரமும் கைப்பழக்கம் .
மார்தட்டிச் சொல்லிடுவோம்
------- மங்காதே என்றென்றும் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Jan-17, 11:11 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 239

மேலே