சிறுகதை கங்கை இன்னும் வற்றி விட வில்லை
கங்கை இன்னும் வற்றி விடவில்லை !
இராஜலெட்சுமி தியேட்டர் முன்புறம் உள்ள சாலையில், கூட்டம் கூடியிருந்தது. அங்கு பாம்பாட்டி ஏதும் வித்தை, ஏதும் காட்டிக் கொண்டிருக்கிறானா? என்று விக்னேஷ் அருகில் சென்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு பார்த்தான். ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் அங்கு மயங்கிக் கிடந்தாள். கிழிந்த சேலையுடன் எண்ணெய் பசை காணாத தலைமுடி தோற்றம் அவளை ஏழைப்பெண் என காட்டிக் கொண்டிருந்தது.. சுற்றிலும் இருந்தவர்கள் வேடிக்கையில் மூழ்கியிருந்தார்கள். ஒருத்தராவது இடத்தை விட்டு நகரவில்லை.
“ ஐயோ பாவம்! யார் பெத்த பெண்ணோ ரோட்டில் விழுந்து கிடக்குது! “ என்ற அனுதாப வார்த்தகள் கூட்டத்தில்.
“இப்படி வயித்த தள்ளிக்கிட்டு அவசியம் வெளியே வரணும்மாடா !” இது சில இளைஞர்களின் விமர்சன வார்த்தைகள்.
“ டேய் மச்சி ராஜலெட்சுமி தியேட்டர் முன்னாடி இப்போ குழந்தை பொறந்தா என்ன பேரு வைக்கலாம்”.
“தியேட்டரில் ரஜினி படம் ஓடுது. ரஜினி பேரே வைத்து விடலாம்.”
பெண் குழந்தை பொறந்தா என்ன பேரு வைப்பது. சிரித்துக் கொண்டே தியேட்டர் பேரே வச்சிடலாம்டா. இப்படியான ஏளனப் பேச்சுக்கள் சிரிப்புகள்.
இப்படி ஆள் ஆளாக்கு அனுதாப வார்த்தைகள், இரக்கமற்ற ஏளனப் பேச்சுக்கள் தவிர, ஒருத்தர் கூட இடத்தை விட்டு நகரவில்லை. பெண்ணுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.
அதற்குள் தியேட்டரில் டிக்கெட் கொடுப்பதற்கு ‘டிரிங்’ டிரிங் என அலறும் சப்தம் கேட்டவுடன் கூட்டத்தில் இருந்த பாதிப்பேர் தியேட்டரை நோக்கி ஓடினார்கள்.
வினாடியில் எல்லாமே கசந்தது விக்னேஷ்க்கு “ நகருங்க நகருங்க கொஞ்சம்” என்றவாறு கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றான்.
“யாருப்பா நீ” அவ்வளவு நேரம் வெறுமனே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாடி வைத்த கிழவர் ஒருவர் வாயைத் திறந்தார்.
விக்னேஷ் சிறிதும் தயங்காமல் “ இந்தப் பொண்ணு என்னோட தங்கச்சிங்க” என்றான்.
“ஏம்பா! உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா. நிறை மாத தங்கச்சியை தனியே விட்டு விட்டு எங்கு போய்விட்டு வர்ரே !
விக்னேஷ் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், அப்போது அவ்வழியே வந்து கொண்டிருந்த வாடகைக் காரை கைதட்டி வரவழைத்தான்.
அருகே வந்து நூறு ரூபாய் கொடுங்க வரேன் என்று பேரம் பேசினான்.
“ சரி ! “ என்றான் விக்னேஷ்.
“ ஏன் சார், அம்மா யாரு, உங்க சம்சாரங்களா?” என்று கேட்டவுடன் விக்னேஷ்க்கு இந்த உலகத்தின் மீதே கோபம் வந்தது.
சலிப்புடன் “ அட, யாரோ ஒரு போம்பளையப்பா, ரோட்டிலே மயக்கமாக விழுந்து கிடந்தாங்க. அதைப் பார்த்து கூட்டம் வேடிக்கையும், ஏளனப் பேச்சுகளுமே பேசினாங்க. யாரும் இப்பெண்ணுக்கு உதவி செய்யனும்னு முன் வரலே. என்னடா உலகமப்பா! வர வர நம்ம ஜனங்களுக்கு மனிதாபிமானமே வறண்டு போச்சுப்பா..
வற்றாத ஜீவநதி ஓடும் கங்கையும் காவிரியும் ஓடும் பூமியில் வாழும் ஜனங்களிடம் உதவி செய்ய வேண்டும் என்ற மனிதநேயமும் வறண்டு போச்சுப்பா” என்று தன மனதில் தோன்றியதை எல்லாம் ஆத்திரத்த்துடன் கொட்டினான் விக்னேஷ்.
“ ...............”
மருத்துவமனையில் சேர்த்துவிட்டு , தன சட்டைப் பாக்கெட்டைப் பார்த்தான். ஒரு நூறு ரூபாய் மட்டும் இருந்தது. அந்த ரூபாயை எடுத்து ஓட்டுனரிடம் விக்னேஷ் நீட்டினான்.
“ வேண்டாம் சார் ! “ என்று மறுத்தான்.
“ஏம்ப்பா ? பணம் பத்தாதா ?” விக்னேஷ்.
“ சார் ! முதல்ல உங்க சூழ்நிலையைப் பார்க்காமல் உங்ககிட்ட பணம் கேட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கறேன். யாரோ அனாதையா ரோட்டிலே மயங்கிக் கிடந்த பெண்ணை, உங்க தங்கை மாதிரி நினைத்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர இவ்வளவு அக்கறையுடன் செலவு செய்யும்போது, தயாராக இருக்கும்போது.. நான் இந்த நூறு ரூபாயை வேண்டாம் என விட்டுக் கொடுக்கற்திலே தப்பே இல்லே சார். உதவி செய்ய எனக்கும் வாய்ப்பு கொடுத்தற்கு உங்களுக்கு ரொம்ப நன்றி சார் ‘ நான் வரேன் சார்” என்றான்.
ஓட்டுனர் கூறியதைக் கேட்ட விக்னேஷ் மகிழ்ந்து இன்னும் மனிதநேயம் இங்கு இருக்குது என தனக்குள் சற்று உரக்க முண்ங்கியதை கேட்டு ஓட்டுனர் மறுபடியும் ஓடி வந்து “ என்ன சார் உதவி வேண்டும் “ என்றான்.
“ ஒன்றுமில்லையப்பா, நீ கூறியதை கேட்டவுடன், கங்கை இன்னும் இங்கு வற்றிவிடவில்லையப்பா என்று எனக்குத் தோன்றியது” என விக்னேஷ் கூறிக் கொண்டே தன வழியே
நடந்து சென்றான்.