சிறுகதை - எதிர்பாராத முடிவு
சிறுகதை
எதிர்பாராத முடிவு !
விநாயகர் படத்தின் அருகில், மாட்டியிருந்த அழைப்பு மணியின் சப்தம் கேட்டு வாசல் கதவை திறந்தேன். திறந்தவள் திகைத்தேன். முன் பின் தெரியாத பெண் ஒருத்தி , என் எதிரே நின்று கொண்டிருந்தாள். ‘என்ன ?’ என்பது போல் நான் அவளை வியப்புடன் பார்த்தேன். அவள் வெகு அலட்சியமாக “ உன்னால் ஒரு கொலை செய்ய முடியுமா ? “என்று சம்மந்தமில்லாமல் என்னைப் பார்த்துக் கேட்டாள்.
நான் அவளைப் பார்த்து “உன் பெயர் என்ன ? “ என்று கேட்டேன்.
“ என் பெயர் லதா. “ என்றாள்.
“உன்னால் ஒரு கொலை செய்ய முடியுமா ? “ லதா மீண்டும் என்னைப் பார்த்துக் கேட்டாள்
லதா கேட்ட அந்தக் கேள்விக்கு ‘முடியாது ‘ என்று நான் தீர்மானமாகச் சொல்லியிருக்க வேண்டும் சொல்லவில்லை. அப்படி நான் சொல்லியிருந்தால், இந்தக் கதை என்ற ரதம் , இருந்த இடத்திலேயே இருந்து விடும். வாசகர்களும் ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள.
நான் தீர்மானம் இல்லாமல் லதாவிடம் மீண்டும் சொன்னேன் ‘ முடியாது !” என்று .
என்னோட பதிலில் உள்ள தயக்கத்தைக் கவனமுடன் அவள் கவனித்து விட்டு, லதா தன் கையில் வைத்ததிருந்த ப்ரீப் கேஸ்-ஐ
திறந்து காட்டினாள். பெட்டி நிறைய புத்தம் புதிய நூறு ரூபாய் கட்டுகள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து, நான் திகைத்தேன். லதா ப்ரீப் கேஸ்- ஐ திறந்து காட்டியவுடன், என்னோட மனசாட்சியையும் மூடி விட்டேன்.
“ சரி ! யாரைக் கொலை பண்ணனும் ..? “ என லதாவிடம் நான் கேட்டேன்.
என் கேள்விக்குப் பதில் அளிக்காமல், என்னை நோக்கி “ “உங்க பேர் என்ன ? “ என்று லதா திருப்பிக் கேட்டாள்.
அதற்கு நான் எவ்வித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்தேன். லதாவிடம் என்னோட பெயரைக் கூற விரும்பவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
லதா மீண்டும் “என் கணவரை அதாவது அக்கினியை வலம் வந்து என் கழுத்தில், தாலி கட்டிய என்னோட கணவரை “ என்றாள் லதா . .
நான் அதிர்ச்சி அடைந்தேன். ‘கொலை செய்வாள் பத்தினி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ‘ லதா விஷயத்தில் , ‘கொலை செய்ய ஆள் தேடுவாள் பத்தினி ‘ என்று இப்போது மாற்ற வேண்டும்போல் என மனதிற்குள்ளே எண்ணிக்கொண்டேன்.
“ சரி உங்க கணவரை, நீங்களே கொன்று விடலாமே ? நான் எதற்கு. “ வேண்டுமென்றே அவள் வாயைக் கிளறினேன். ஆனால் அப்போது லதா பதில் கூற வாயைத் திறக்க வில்லை.
“ உங்க கணவரைக் கொலை செய்ய நெனைக்கக் காரணம்.என்ன ? “ நான் பெரிய வக்கீல் போல் லதாவை நோக்கிக் கேட்டு வைத்தேன்.
“ அது உனக்குத் தேவையில்லாதது. நீ செய்ய வேண்டியது கொலை. அதோட உன்னோட வேலை முடிந்து விட்டது” என்றாள் லதா.
“ அப்படின்னா என்னால் உங்க கணவரைக் கொலை செய்ய முடியாது. நீங்க வந்த வழியே போகலாம்...” என்றேன் நான் பட்டும்படாமலும்.
அவள் போகவில்லை. ‘ போகமாட்டாள் ‘ என்று எனக்கு நன்கு தெரியும். எனது சந்திப்புக்குப்பின் வேறு ஆளை வைத்து, கொலை செய்தாலோ, அவளே அவள் கணவரைக் கொலை செய்தாலும், நான் அவளைப் போலீசில் வசமாக மாட்டி விடுவேன் என்று அவளுக்கு நன்கு தெரியும்.
“ சரி ! முழு விவரத்தையும் சொல்றேன் “ என்று ஆரம்பித்தாள் லதா. என்னிடம் பேச ஆரம்பித்தாள் என்பதை விட அவள் உளற ஆரம்பித்தாள் என்றுதான் கூறவேண்டும்
“என்னோட கணவர் எனக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணோட கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறார். அவரது செயல் எனக்குப் பிடிக்கவில்லை...... “ என லதா ஆரம்பித்தவுடன்
.
நான் சற்று பலமாகவே சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு “ லதா, இதுக்குப் போய் உங்க கணவனை நீங்க கொலை செய்யச் சொல்றேங்களே ! உங்களைப் போல் பெரிய இடத்திலே இதெல்லாம் சர்வ சாதாரணம்ந்தானே ...”. என்று கூறினேன்
.
லதா உரத்த குரலில் “ சட் அப் பேசாமல் இரு.! எனக்கு ஒரு குணம் உண்டு. நான் அனுபவித்த பொருளை வேறு எவரும் அனுபவிக்க கூடாது. அனுபவவிக்கவும் விட மாட்டேன். என் கணவர் எனக்கு மட்டும்தான் சொந்தம். வேறு யாரும் மனசாலே கூட அவரை நினைத்துப் பார்க்கக் கூடாது “.என்று கூறினாள்
.
“ லதா ! உங்க கணவர் இன்னொரு பெண்ணோட தொடர்புன்னு சொல்றீங்களே. அந்தப்பெண்ணனின் பேர் என்ன , அவங்க எங்கே எப்படி இருப்பாங்க என்ற விவரம் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா ? “ என்று கேட்டேன்.
லதா என்னிடம் பேசப் பேச , அவள் யார் என்பது எனக்கு நன்கு புரிய ஆரம்பித்தது. நான் எனக்குள்ளே ஒரு முடிவுடன் லதாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.
.
லதா என்னிடம் “ அவள் பெயர் ரத்தினமணி என்பது மட்டும் எனக்குத் தெரியும். மத்தபடி , அவள் எங்கே எப்படி இருக்கா ? ஏன் , அவள் கருப்பா, செவப்பான்னு கூட எனக்குத் தெரியாது.. எனக்கு அதற்கெல்லாம் நேரமுமில்லே. “ என படபடவென லதா கூறி முடித்தாள்.
“ பின்னே எதற்கு லதா இந்த முடிவுக்கு வந்தீங்கன்னு, அதாவது உங்க கணவரை கொலை செய்ய வேண்டும் என்ற வெறி எப்படி என்பதை நான் தெரிஞ்சக்கலாமா ? “ என் அவள் வாயிலிருந்து என்ன வருகிறது என பார்த்தேன்.
“என் கணவருக்கு வழக்கமாக நீண்டகாலமாக காரோட்டிப் போகும் டிரைவர்தான் எங்கிட்டே எதேச்சையாக ரத்தினமணியைப் பற்றி என்னிடம் பேச்சுவாக்கில் சொன்னான். மத்த விவரங்களைச் சொல்ல மறுத்து விட்டான்.” என்று லதா கூறினாள்.
“ உங்க கணவர் அப்படி ! நீங்க எப்படி ! “ என்று அசட்டுத் தைரியத்தில் கேட்டு வைத்தேன்.
“ எனக்கு இருக்கிற வசதிக்கு நான் நாலு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். நான் அப்படியிருக்க விரும்பலே.. இப்ப நான் சமூகநலத் தலைவியாக இருக்கேன். சமூகநலத் தலைவியாக இருக்கேன் என்பதுக்காக, நான் சமூகத்திக்கு நன்மை செய்ய வேண்டும் என்றஉயர்ந்த நோக்கம் எண்ணமெல்லாம், எனக்கு இல்லை. வெளிப்படையாகவே பேசினாள்.
என்னோட பெயர் எல்லாப் பத்திரிகையிலும் வரணும்., டி.வி யிலேயெல்லாம் என்னோட பேட்டி வரணும்னுதான் சமூக நலத் தலைவியாக இருக்கேன். மற்றப்படி சேவை மனப்பான்மை என்பதெல்லாம் எனக்குத் துளி கூட இல்லை என்று “ லதா வெளிப்படையாகவே என்னிடம் பேசினாள்.
லதா பேசப் பேச , நான் எனக்குள்ளே ஒரு திட்டம் தீட்டி, ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். . எனவே லதாவிடம். “ லதா உங்க கணவரை கொலை செய்வது பற்றி யோசித்து சொல்றேன். நீங்க நாளை மதியம் இங்கே வாங்க. இப்போ நீங்க போகலாம் “ என் அவளுக்கு நான் விடை கொடுத்தேன்.
மறுநாள் நண்பகல் என் வீட்டுக் கதவை தட்டினாள் லதா. அவள் கண்டிப்பாக ‘என்னைத் தேடி வருவாள்’ என எனக்குத் தெரியும். என்னால் அவளுக்கு காரியம் ஆக வேண்டியுள்ளதால், விடாமல் என்னை துரத்தினாள் என்றுதான் என்று கூறவேண்டும்.
அவள் கணவரை கொலை செய்வதற்கு, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ஒருவேளை லதா இப்படி நினைத்து இருக்கலாம். அதாவது பெண்ணுக்கு பெண் எதையும் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையாகக் கூட இருக்கலாம்.
லதா என்னிடம் பேசியதிலிருந்து அவள் சாப்பிட்டவுடன் தவறாமல் வெத்திலை பாக்கு போடும் பழக்கம் இருந்தது என்பது எனக்குத் தெரிந்தது. என்னோட திட்டத்திற்கு அது மிகவும் வசதியாகவே இருந்தது.
.
நானும் லதாவும் சாப்பிட்டு விட்டு, எனது வீட்டுக்கு அருகில் உள்ள சிறுவர் பூங்காவுக்குச் சென்றோம். அப்போது பூங்காவில் ஒன்றிரண்டு சிறுவர்களையும், எங்களையும் தவிர யாரும் இல்லை. பூங்காவில் போடப்பட்ட நீண்ட சிமிண்ட் பெஞ்சில் இருவரும் அமர்ந்துகொண்டு பேசினோம். லதாவுக்கு நான் கொண்டு வந்த வெற்றிலையில் சுண்ணாம்பு போன்ற களிம்பைத் தடவி மடித்துக் கொடுத்தேன். அவள் அதை ஆர்வமாக வாங்கி வாயில் போட்டு மென்றுகொண்டே பேச ஆரம்பித்தாள்.
லதா உளற ஆரம்பித்தாள் “ நான் பெருமைக்காக சமூகநலத் தலைவியாக இருந்து கொண்டு ,வீட்டினை கவனிக்காமல் வெளியே சுற்றுவது என் கணவருக்குப் பிடிக்கல்ல. குறிப்பாகாக . அவரை நான் தனியாக வீட்டிலிருந்து கவனிக்கல்ல என்பதுதான் அவருக்கு என் மீது பெரிய ஆதங்கம். அவருக்கு சாப்பாடு மற்ற அவர் தேவைகளையெல்லாம் கவனிப்பது எங்க வீட்டு வேலைக்காரர்கள்தான். “ மேலும் தொடர்ந்தாள்
“ நானும் என் கணவரும் வீட்டில் சந்தித்து பேசுவது கூட அபூர்வமாத்தான் இருக்கும். காரணம் எனக்குள் ஏற்பட்ட புகழ் பெற வேண்டும் என்ற வெறிதான் என்று கூறவேண்டும்.” என்று வெளிப்படையாக லதா என்னிடம் கூறினாள்.
“ உங்க கணவரை கொலை செய்யனுமின்னு என்ற வெறி. இப்போ எப்படி திடீர்ன்னு உங்களுக்கு இப்போது ஏற்பட்டது. என்ன காரணம் லதா “ எனக் கேட்டேன்.
“ போன வாரம் இரவு ஒரு நாள் , வீட்டில் வைத்து எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அவர் என்னிடம் வெளிப்படையாகவே என்னை டைவர்ஸ் பண்ணிட்டு, அந்த ரத்தினமணியைக் கட்டிகொள்ளப் போறேன்னு வாய் கூசாமல் சொல்றார். அப்படி நடந்தால் என் கவுரவம் என்ன ஆவது. நான் எவ்வளவோ, என் கணவரிடம் வாதாடிப் பார்த்தேன். அவர் ரத்தினமணியை கட்டிப்பதிலேயே பிடிவாதமாக இருந்தார். எனவே என்னோட கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து உன்கிட்ட வந்திருக்கேன். “ என மூச்சு விடாமல் பேசி முடித்தாள் லதா.
“ லதா நீங்க எடுத்த முடிவு சரியானதுதான் ! “ என்று அவளுக்கு சாதகமாகவே நான் பேசினேன்
.
நான் கையோடு கொண்டு வந்த அலுமினிய டப்பாவை திறந்து அதில் மூக்குப் பொடி டப்பா போல் காணப்படும், டப்பாவை லதாவிடம் கொடுத்தேன். கொடுத்துவிட்டு “லதா இது ஸ்பெஷல் சுண்ணாம்புபோல் தோற்றமளிக்கும் வெள்ளை நிற களிம்பு. அமெரிக்காவில் தடை செய்யப்பட்டகொடிய விஷம். இதை வெற்றிலையில் சுண்ணாம்புபோல் தடவி, உங்க கணவருக்கு கொடுத்திடுங்க அரைமணி நேரத்தில், உங்க கணவர் அவுட் ! “ என்றேன்.
“ என்ன சொல்றே நீ ! விஷம் கலந்து கொடுக்கறத்துக்கு நீ வேணுமா? “ என்றாள் லதா பயத்துடன்
.
“ லதா ! அவசரப்படாதீங்க ஸ்பெஷல் சுண்ணாம்புன்னு சொன்னேன் கவனிச்சீங்களா . யாரும் சந்தேகப்பட்டு, உங்க கணவர் உடலை போஸ்ட்மார்ட்டம் பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது. பாய்ஷன் நேரடியாக ரத்தத்தோடு கலந்து விடும். டாக்டர்களே உன் கணவர் சாவு இயற்கை மரணம்னு சர்ட்டிபிகேட் கொடுத்து விடுவார்கள். போதுமா இன்னும் விளக்கம் தேவையா ? “ என்று கூறிக்கொண்டே லதாவை பரிதாபமாக பார்த்தேன்.
“ பேஷ் பேஷ் ! ... என்று வியந்து கூறிய லதா, சோர்வாக என்னைப் பார்த்து “ இந்த பாய்சன் வேலை செய்யுறதுன்னு எனக்கு எப்படி தெரியும் ! அதன் அறிகுறிகள் ஏதும் தெரியுமா ? “ என்று லதா கேட்டாள்.
“ ஓ .. முதல்ல அவங்க நாக்கு பேச எழாது. எழ மறுத்து விடும். பேசும் சக்தியை இழந்து விடும். சாகறத்துக்கு அஞ்சு நிமிஷம் இருக்கும்போது கண்பார்வையும் இழந்து உயிர் பிரிந்து விடும். “ என்றேன்
“ ஐயோ ! எனக்கு பேச முடியலேயே ! கண் பார்வையும் மங்கிக் கொண்டு வருதே ! “ என லதா கையினால் சைகை காட்ட ஆரம்பித்தாள்.
“ லதா ! நீங்க கொலை செய்யத் துடிக்கும் உங்க கணவரின் வருங்கால மனைவி ரத்தினமணி நான்தான். இது புரியாமல் ...... இதுதான் விதி என்பது. லதா ! உன்னோட முடிவே நீயே எதிர்பாராத முடிவுதான். “ எனக் கூறி விட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றேன் வெற்றிக்களிப்புடன்.