புத்தாண்டில் எனது புதிய பாதை
.......புத்தாண்டில் எனது புதிய பாதை......
குப்பைத் தொட்டியை நிரப்பிய கிழித்தெறிந்த நாட்காட்டியின் திகதிகள் புதிய வருடத்தின் தொடக்கத்தில் மீண்டும் ஒட்டிக்கொண்டன
முழு வருடத்திற்குமான பயணத்தின் திட்டங்களோடு.....!
பழைய தினக்குறிப்பின் இறுதிப்பக்கம் முடிந்த வருடத்தின் முடிவுரையானது...
ஆண்டுத் தொடக்கத்தின் பக்கத்தில் நான் இட்ட முதற்புள்ளி புதிய பாதைக்கான முன்னுரையானது.....!
கடந்த காலங்களில் கற்றவை அனுபவப் பாடங்களாய் மாற...
அவற்றின் துணையோடு நானும் பயணிக்கக் காத்திருக்கிறேன் நிகழ்காலத் தண்டவாளத்தில் எனக்காய் காத்திருக்கும் வெற்றிப் பாதையினை நோக்கி....!
நொடி முட்களின் முற்றுப்பெறாத சுழற்சிக்குள் முட்டி மோதப்போகிறேன்
அழியாத கால்தடமாய் சரித்திரப் புத்தகத்தில் என் பெயரினைப் பதித்திடவே புதிய வழியில் என் கனவுகளோடு நானும் போட்டியிடப் போகின்றேன்.....!!
-உதயசகி-
யாழ்ப்பாணம்