உயிரின் துளியை

நீ பரிசளித்த
இந்த இனிமையான
துயரங்களின் வலியை
அதன் ஆதிச்சுவையை
எப்போது உணர்வாயோ
அப்போதே
நீ உணர்வுகளின்
நட்சத்திரங்கள் ஒளிர்வதாய்
அன்பின் வெண்பனி உடைவதாய்
உள்மனதில் நிலவின்
கனிவு திரள்வதாய்
மனதடி வனாந்தரத்தில்
அலையும் சக்கரவாகமாய்
ஒரு மழை குடிக்கும்
கசிந்துருகும் கண்ணீரைப்
பெற்றிருப்பாய்.
அன்றே
கதிரறுக்கும்
அரிவாள் இரண்டை
முகத்தில்
இரு மருங்கிலும் சொருகி
உயிரின் துளியை வெட்டி எடுத்து
வைரங்களாய் பின்னி
நிலவென உதிர்ந்த ஒளியாய்
உன் பெயரை உச்சரிக்கிறேன்.
இப் பிரபஞ்சத்தின் நீல மலராய்
உனக்காக உன்னிடமிருந்தே
சிறகிதழ்களைப் பெற்று
என்னை மீட்டுத் தருகிறேன்.
அதுவரை
நீ விட்டுச் சென்ற இந்த
ஆகாயத்துயரை பருகித் திளைக்கிறேன்
நீ அழாது இருப்பாயானால்.
தமிழ் உதயா

எழுதியவர் : தமிழ் உதயா (12-Jan-17, 9:16 pm)
சேர்த்தது : தமிழ் உதயா
Tanglish : uyeerin thuliyai
பார்வை : 113

மேலே