நீ உயிரிடுவாய் தானே

பகல் குடித்து
இருள் மூடிய பின்னர் தான்
விழித்துக் கொள்கிறாய்
திடுதிப்பென
நினைவுக்கடல் குடித்து
கனவில் மிடர் கேட்கும்
உறக்கத்தின்
ஒரு துளியையேனும் ஊற்றிப் போ
பருகித் திளைக்க
நிலவைக் குடித்த
சிற்றாறில் பேரன்பென
சட்டெனத் துமிக்கும்
உன் தீடீர் மழை
குளிர் குடித்து
கூடு திரும்பும் பறவைக்கு
சிறகுலர்த்த
நீ நிழல்
குரல் அறுத்து
நரம்புகள் செய்ய முடியும்
பனிப்பொதியை
உடைத்து ஒரு கவிதை
நாதமென நீ
குளிர்த்தும் சுடர் சூட்டில்
கசங்கிக் கிடந்த
தளிர் மனமொட்டுக்களை
மெல்லென முகிழ்க்கிறாய்
உதிர் சிறகை
ஒவ்வொன்றாய்
சேமித்து வைக்கிறேன்
நீ உயிரிடுவாய் தானே. ..!
தமிழ் உதயா

எழுதியவர் : தமிழ் உதயா (12-Jan-17, 9:05 pm)
சேர்த்தது : தமிழ் உதயா
பார்வை : 111

மேலே