சந்தோசம் பூக்கவைக்கும் சங்கீதங்கள்
குழந்தைகளே
சந்தோசம் பூக்கவைக்கும் சங்கீதங்கள்..
இன்னிசையை அரங்கேற்றும் ஆலாபனைகள்..
வருத்தத்திற்கு மருந்தாவார்கள்..
காயத்தை ஆறவைக்கும் களிம்பாவார்கள்..
ஏழையின் வீட்டிலும்
குழந்தையின் சிரிப்பொலி பசியாற்றும்..
எதிரியின் வீட்டிலெழும்
குழந்தையின் சிரிப்பொலி
சமாதானக் கொடிகாட்டும்..
குழந்தைகள் அடம் பிடிக்கட்டும்..
குழந்தைகள் நம்மை அடிக்கட்டும்..
குழந்தைகள் கத்திச் சிரிக்கட்டும்..
குழந்தைகள் தமது தேவைகளை
அழுதழுதே பெற்றுக் கொள்ளட்டும்..
ஏனெனில் அவர்கள் குழந்தைகள்
குழந்தைகளாவே குழந்தைப் பருவத்தில்
வாழ்ந்திருக்கட்டும்..
குழந்தைகளின் ஆர்ப்பாட்டங்களே நமக்குத் தேவை..
குழந்தைகளின் ஓடிப்பிடித்தலே நமக்கு ஊட்டச்சத்து..
குழந்தைகளின் கண்ணாமூச்சியே நமது வயதுமறப்பான்..
குழந்தைகளின் மனமே கோயில்..
குழந்தை துள்ளி ஆடும் வீடே ஒரு சோலை..

