பொய்கள் பற்றிய உண்மைகள்
மூடிவைத்துக் கழுத்தறுக்கப்
மிகச் சிறந்த ஆயுதம்.
பொய்.
பொய்களைப் புழுவாய் மாட்டிய
நாக்குத் தூண்டிலை
வசீகரமாய் வீசுகையில்
மாட்டிக்கொள்கின்றது
மீன்களாய் உண்மை .
காற்றைப்போல எங்கும்
வியாபித்திருக்கும்
பொய்களை சுமந்த வண்ணமே
விடிகிறது பொழுது.
சூழ்நிலை சந்தையில்
தகுந்தவற்றை தேர்ந்தெடுத்து
உபயோகப்படுத்தும்
வாடிக்கையாளர் போலத்தான்
இருக்கின்றோம் எல்லோரும்
மேகங்களின் கூடல்களால்
மழைதருவதாய் சமிஞ்ஞை செய்து
களைந்து போகையில்
வாக்குறுதிகள் தந்து ஏமாற்றும்
எங்கள் தலைவர்கள் போலவே
வானமும் சிலநேரம்
வெய்யில் பதாகையில் தனது
பொய்யை அறிவித்து விடுகிறது.
வருணனைகள் என்னும்
வண்ண ஆடைகளை பூணுகின்ற
பொய்களின் அழகில்
மெய்மறந்து விடுகிறது
ஆரவாரமற்ற உண்மைக்கு
மதிப்பளிக்கா மனிதம்
உண்மையைச் சொல்லி
உபத்திரவம் கொள்வதிலும்
பொய்களை சொல்லி
புன்னகைகளை வாங்கிக் கொள்வது
நடைமுறை சாத்தியமாய்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
பொய்கள்
ஆயுட்கால அருஞ்சொத்தாய்
வியாபாரிகளிடம் இருந்தாலும்
மொத்தமாய் குத்தகைக்கு
வாங்கிக் கொண்டவர்களை
சிம்மாசனத்தில் உட்காரவைத்து
அழகு பார்கின்ற காரணத்தால்
தலைகீழாகி விடுகிறது
வாழ்க்கை.
உதாரண புருசனாய்
எடுத்துக்காட்டாய் எவரையும்
படைக்காத பிரம்மன்
இன்னும் அண்டப்புளுகு கிரீடத்தை
எவர்தலையிலும் சூடவில்லை.
பொய்கள் பற்றிய உண்மையை
கண்டுகொள்ளாதிருக்க
கட்டப்பட்டிருக்கிறது
நீதி தேவதையின் கண்.
உண்மைகளை மறைப்பதிலிருந்து
பொய்களை வாழவைக்கும்
பிரதிநிதிகளாய் நாடுகளெங்கும்
தோற்றுவிக்கப்பட்டவர்களோ
வழக்கறிஞர்கள்?
இருப்பதை இல்லை என்றும்
இல்லாததை இருப்பதாகவும்
திசைதிருப்பும் மனிதர்கள் வாயிலாக
பொய்கள் பிரசவமானாலும்
ஜனநாயக மருத்துவ மனைகளில்
தேர்தல் பேறுகாலத்தில்
தலைவர்களை பிறப்பிப்பதிலிருந்து
பொய்களும் தாயாகி விடுகின்றன.
பொய்களின் அலங்காரங்களுடன்
வாழ்க்கையை அனுபவிக்கும்
மனிதர்களின் எண்ணங்களை
மரணம் வந்து பொய்ப்பிக்கும்வரை
பொய்கள் உண்மைகளை
மூடிவைக்கப் பயன்படுத்தும்
கண்ணாடி மூடி என்பதனை
எவரும் புரிவதில்லை.
*மெய்யன் நடராஜ்