உழவன் எனும் சித்தன்

உழவன் எனும் "சித்தன்"
=======================
மண்ணிலுண்டாம் பலதொழிலதில் சிறப்பென..
அவனியின் அச்சாம் உழுதொழிலே பிரதானமாம்!
உலகத்துக்கே உணவளிக்கும் உழுதொழிலே..
உழவனிடும் முதலுழைப்பே முதலான உண்மையென்றோ!
உழைப்பில் விளைந்த வியர்வைப்பூக்கள் உன் பின்னால்தெரிய..
உழைப்பின் வாசம் வீசுமுன் தன்னம்பிக்கைச் செடியில்!
உழவனுக்கொரு கேடென்றால், உலகமறியுமுன்னே..யெங்கள்
களமும்விளைநிலமும் கம்மாக்கரையும் கலவரம்கொள்ளும்!
உறவாடும்நுகத்தடியும் மாடுமெங்கள் மனதறியும் நன்றாக!
உழவனின் இளைப்பாறா உழைப்புதனை வியந்துசொல்லும் !
உழவுத்தொழிலுக்கு உயிரான தண்ணீரைத் தனதாக்கி
உரிமைகொண்டதொரு அணையில் வீணாகத்தேக்கியதால்...
எங்கள்தேகமென்றைக்கும் சோர்வடையாது!
நல்லவேளை ஆதவனும் தென்றலையுமடக்க..
இயற்கை யார்கையிலும் அகப்படவில்லையய்யா!
ஓராயிரம் இன்னல்கள் வந்தாலுமெங்கள்..
உழுதொழிலொருபோதும் நில்லாது!
உழவோடு உழவுக்கு உதவுகின்ற ஒவ்வொன்றும்..
வாழ்வோடுவாழ்வுக்கு வேண்டியபல வரலாறுகூறுதுமே!
இணைந்து சோடியாய் இனிதே இல்லறத்தைநடத்த..
எங்கள் நுகத்தடிதானே யின்றும்பாடம் சொல்லுதுமனிதருக்கே!
கீழ்மண்ணை மேல்மண்ணாக்க மேலும்கீழுமென..
எழுகின்ற ஏர்க்காலாயினு முங்கள்மனதில்...
எதிர்மறை யெண்ணங்கள்மறைய நேர்மறைமேலாகுமன்றோ!
கலப்பையொன்றைக் கையில் பிடித்தவுடன்!
மண்ணைமட்டுமல்ல உங்கள் மனதையும்...
அல்லவா சேர்த்துழுமெங்கள் உழுகலப்பை!
உழுகின்ற உன்னதவேலை ஒருகணம் நின்றால்...
சுற்றும்பூமிகூட சுழலமறுக்குமொரு நொடிப்பொழுது!
எறுமையான எங்களினத்தின்மேல் ஏறி வருகின்ற எமனிடம்கூட..
வறுமையில் எங்கள்வாழ்க்கை முடியாதென சூளுரைப்போம்!
உண்டிகொடுக்க மண்டிபோட்டிழுக்கும் எங்களை..
மடுத்தவாயெல்லாம் தாங்கும் பகடென்றானே வள்ளுவன்!
சர்வ வல்லமைபொருந்தியதாலோ என்னவோ?...
சர்வேஸ்வரனென்னை வாகனமாக்கிக் கொண்டாரோ!
இருக்கும்வரையில் உழைத்துக் களைத்தயெங்கள் காளையினம்!
மறைந்தபிறகு மறுபிறவி யிலும்மறவாது மகிழ்ச்சிதருமய்யா!
ஏற்றம்கொண்டு பின்னையு முன்னையுமிறைத்த நீரெல்லாம்...
களத்துமேட்டில் கச்சிதமாய்ப் பாய்ந்தாலும்...
ஏற்றமிறக்கம் இல்லையம்மா எங்கள்வாழ்வில்...
இறக்கமென்று வரும்போது இறைவனும் என்செயும்!
ஏரோட்டுமெங்கள் சகோதரனின் வீரம்காக்க மெரினாவில்...
போராடுமுங்கள் தீரம் கண்டு கடலலைகூட கரைக்குவரமறுக்கிறதே!
தமிழரின் வீரமும் அறமும் எட்டுதிசையும் பட்டுத்தெரித்ததின்று
தமிழ்காளையினருமை பெருமையும் அலைகடல்தாண்டியது அணைக்கமுடியாநெருப்பாய்...
இட்டதெல்லாம் பயிரா
பெற்றதெல்லாம் பிள்ளையாவெனக் கேட்க
வானிருந்துகீழ் நோக்கிப்பொழியும் மழையை
கீழிருந்து மேனோக்கும் எங்களுழவர் குடிசிறக்கவேணும்.
ஆயிரம் கவிகள் வந்தனர் போயினராயினுமெங்கள்
ஏருக்கு வலிமைசேர்த்த ஐயன்வள்ளுவன் போல்எவரே?..
அடக்கும் மூச்சினால் அனைத்தையும் அறிந்தவரென்றும்
கடவுளைக் கண்டு தெளிந்தாரை "சித்தரென" சொல்வார்கள்
தன்னைத்தோண்டி தன்னையரியவைத்த பதினெண்மர்மத்தியில்
மண்ணைத்தோண்டி மனிதநேயம்காட்டும் உழவனுமொரு சித்தனே.
=====================================================================
படக்கவிதை போட்டிக்காக வல்லமை மின் இதழுக்கு அனுப்பட்டதன் மறுபதிவு.