எனை மீட்ட வருவாயோ - மரபு கவிதை

எனைமீட்ட வருவாயோ
------ என்னவளும் நீயன்றோ !
உனைத்தேடி வருகின்றேன்
------ உன்னதமே அறிவாயோ !
தனைநோக்கப் பண்பாலே
------ தத்தையுனை நேசித்தேன் !
மனையாளும் நீதானே !
------ மன்னவனும் நான்தானே !


மீட்டுகின்ற வீணையாகி
------ மிடிகளையும் போக்கிடுவாய் !
பாட்டொன்றைக் கேட்டுநானும்
------ பரவசத்தில் எனைமறந்தேன்!
வாட்டுகின்ற காதல்தீ
------ வாசமலர் சூடாதோ !
காட்டுகுயில் குரலினிலே
------- கானங்கள் பாடுகின்றேன் !


வருவாயோ வீணையேநீ
------- வந்தருகே அமர்வாயோ !
தருவாயோ இதயத்தைத்
------- தாவிநானும் சிறைபிடிக்க .
உருகாதோ உனதுள்ளம்
------ உண்மையான காதலினால்
மருகிநானும் நின்றிடுவேன்
------- மலராதோ உண்முகமே!!!


சித்தமது கலந்கிடுதே
------ சித்திரமே பாராயோ !
உத்தமனும் நான்தானே !
------ உணர்வாயோ கண்ணேநீ !
பித்தனாகி வீழ்கின்றேன்
------- பிசகிடுமா என்காதல் !
முத்தமழை பொழியாயோ !
-------- முத்தான ரத்தினமே !


முழுமதியும் உனைக்கண்டு
-------- முகங்காட்டத் தவறிடுமே !
எழுகின்ற கதிரோனும்
------- எத்திக்கும் உன்நினைவால்
வழுவாத நீதியுமே
-------- வழுவிநின்றே தன்னொளியை
விழுமிடுவான் ; மதியாகி
-------- விரைந்துநீயும் வந்திடுவாய் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-17, 8:24 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 110

மேலே