அஞ்சலி

கேட்டதுண்டு
பேசியதில்லை
பார்த்ததுண்டு
பழகியதில்லை
வியந்ததுண்டு
பொறாமை இல்லை
அன்புண்டு
அளவில்லை

காதலித்தேன்
உன் காதல் வரிகளை
ரசித்தேன்
அதன் நடையழகை
பாடினேன்
நீ பாடாத உன் பாடலை
பிடித்தேன்
நீ விற்ற
பட்டாம்பூச்சிகளை

மகிழ்ந்தேன்
தமிழில் உன் வளமை கண்டு
நெகிழ்ந்தேன்
நீ பயணப்பட்ட பாதை கண்டு
கலங்கினேன்
கண்ணீர் அஞ்சலியில் உன் முகம் கண்டு
அரற்றினேன்
இரக்கம் இல்லா இயற்கை கண்டு

முத்துக்குமரா!
காகிதத்தில் நீ எழுதிய காவியம்
காற்றில் கலந்துவிட்டது
அவை அழியப்போவதில்லை
நீ சிறகடிக்கவிட்ட பட்டாம்பூச்சிகள் தொலையப்போவதில்லை
காலம்
அவற்றின் நிறத்தை மாற்றப்போவதில்லை
போய் வா கவிஞனே!

எழுதியவர் : பூம்பாவை (2-Feb-17, 5:18 pm)
சேர்த்தது : Poompaavai
Tanglish : anjali
பார்வை : 1759

மேலே