பட்டாம் பூச்சி பறந்திடுமே

கண்கள் சுமந்த கனவுகளும்
***காதல் நெஞ்சைக் காட்டிவிடும்!
எண்ணம் முழுதும் அலையலையாய்
***இன்ப வெள்ளம் பாய்ந்துவிடும்!
வண்ணக் கவிதை தினம்வடித்து
***வதனம் மலர்ந்து வனப்புபெறும்!
கண்ட கனவும் ஈடேற
***காலம் பதிலைச் சொல்லிடுமே!!

பாவை நெஞ்சில் பலவண்ண
***பட்டாம் பூச்சி பறந்திடுமே !
பூவைப் போன்ற மென்மையுடன்
***பொலிவாய் விழிகள் விரிந்திடுமே !
கோவைப் பழமாய் இதழிரண்டும்
***கொஞ்சும் சிரிப்பில் சிவந்திடுமே !
தீவைப் போலத் தனித்திருந்து
***திகட்டா நினைவைப் பருகிடுமே !

துடிப்பும் கூடி இதயத்தில்
***துள்ளும் நாதம் கேட்டிடுமே !
கடித்த கரும்பாய் இனித்திடுமே !
***கனவும் மயக்கம் தந்திடுமே !
பிடித்த உணவும் கசந்திடுமே !
***பிரிவை மனமோ வெறுத்திடுமே !
விடியும் வரையில் தூக்கமின்றி
***விழிகள் கனவால் நிறைந்திடுமே

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Feb-17, 12:33 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 69

மேலே