ஏழ்மையின் வாசலில் பிறப்பெடுத்தால்

ஏழ்மையின் வாசலில் பிறப்பெடுத்தால்
=எதிர்கொள லாமே பலதுயரம்
வாழ்வினில் கிடைக்காப் பொருள்களெலாம்
=வாங்கிட கனவுகள் வளர்த்திடலாம்
கூழ்கஞ்சி என்று கடைகளிலே
=கிடைகாப் பானமும் அருந்திடலாம்
சூழ்நிலைக் கேற்ப அனுசரித்து
=சுடர்விட விளக்காய் எரிந்திடலாம்.

வரிசையில் நின்றிடும் பழக்கமதை
=வாழ்வதன் நியதியாய்க் கொண்டிடலாம்
உரிமைகள் மறுத்திடும் தேசத்திலே
=ஊமையை போலவே இருந்திடலாம்
எரிமலை வெடித்திடும் நிகழ்வுதனை
=இதயமும் தாங்கிடப் பழகிடலாம்
நரித்துவ மனிதரின் கூடத்திலே
=நடனமும் புரிந்திடும் வரம்பெறலாம்

இருப்பதைக் கொண்டு சிறப்புடனே
=இருந்திட முடிவதை படித்திடலாம்
வருவதை எண்ணி கலங்காமல்
=வாழ்ந்திடும் உறுதியும் வளர்த்திடலாம்
கருத்துடன் பிழைக்கும் துணிச்சலுடன்
=காரியம் யாவுமே புரிந்திடலாம்
எருதென உழைத்திடும் திறம்படைத்து
=இறுதியி லேனும் ஜெயித்திடலாம்
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-Feb-17, 4:13 pm)
பார்வை : 69

மேலே