செண்பகப் பூக்களின் வளைவுகளானவள்

வெயில் பிடித்தலையும்
உன் வீதி ஞாயிறுகளில்
குறைந்த பட்சம் என்
சனி இரவுகளையாவது
நடக்க விடு....

நீ அனுப்பும் செண்பகப் பூக்களை
தொட்டுத் தடவி சேமிக்கும்
அலைபேசிக்குள்
அழாத பொம்மையாக்கு என்னை...

உன் பேருந்து ஜன்னல்
ஓரங்களைப் பிடித்தலையும்
பேய் கூந்தல்காரிகளாகவாவது
என்னை அனுமதி...

ஒரு முத்தத்துக்கு ஏங்கும்
பூவரசம் பீப்பியை
ஊதிக் கொண்டே திரிகிறேன்
இசையிடு கொஞ்சம் இச்சையிடு.....

நீ பார்த்து அனுப்பும் நிலவுக்கு
உன் பாதி நெற்றி என பிதற்றித் திரிய
பொன்மாலை ஆலாபனைக்கு
என்னை சற்று மாற்று...

வெள்ளிக்கம்பியென ஒரு நீள்
முடி சுருளில் என் இருள்தேசம்
சிவக்க
தா உன் கருப்பு நா....

உன் ஓய் ஏய் ஹாய்
ப்பா- வில் கொஞ்சம்
பச்சை தாவரமென வாழ ஒரு காடு சமை
அதில் என்னை வாழ இமை...

உன் சொற்படி அல்லது இப்படி
இது என் முறையென
ஆளுக்கொரு கவிதை எழுத
வேண்டியிருக்கிறது
ஒரு நாள் அரைப் பொழுதின்
ஆழம் அணைக்க
அடியே உன் தாழம் பூமணக்க....!

- கவிஜி

எழுதியவர் : கவிஜி (11-Feb-17, 3:04 pm)
பார்வை : 565

மேலே