காகிதங்கள்

காகிதங்கள்
உலகில் நிகழும் நிகழ்வுகளை
காலையில் மாலையில்
செய்திகளாக அள்ளித் தருவது
நாளிதழ்கள் காகிதங்களே !

கற்பனை உலகத்தை
கருவாக்கி உருவாக்கி
எழுத்தாளர்கள் படைப்புகளை
எழுதித் தருவதும் காகிதங்களே !

காற்று இல்லாமல் கூட
காணலாம் மனித வாழ்க்கை !
காகிதம் இல்லாமல்
காணமுடியுமா? வாழ்க்கையை.

பிறப்பு இறப்புச் சான்று
படிப்பு திருமணச் சான்று
சான்றுகள் எல்லாம்
ஊன்றிப் பார்த்தால் காகிதங்களே !

கைபேசி வருவதற்கு முன்
உற்றார் உறவினர்கள்
காதலர்கள் பேசி மகிழ்ந்தது
கடிதங்கள் எல்லாம் காகிதங்களே !

காகிதக் கப்பல், விமானம்
காகிதப் பறவை ராக்கெட்
சிறுவர்கள் செய்து மகிழ்ந்தது
வெற்றுக் காகிதங்களே !

பணம் ,காசோலை , வரைவோலை
பணவிடை எல்லாமே
நாம் கவனமுடன் கையாளும்
மதிப்பு மிக்க காகிதங்களே !

கருவறை முதல் கல்லறை வரை
கேட்டு வாங்குவதும் தருவதும்
நினைத்துப் பார்த்தால்
வாழ்க்கையே வெற்றுக் காகிதங்களே !

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (11-Feb-17, 6:49 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : kagithangal
பார்வை : 167

மேலே