நீரில் இடும் கோலங்கள்
நீரினிலே இடுகின்ற
------ நிலையற்றக் கோலங்கள்
காரினிலே கன்னியவள்
------ காத்திருக்கக் காதலுறும் .
மாரியது வந்திடினும்
------ மாக்கோலம் மறைந்தாலும்
சீரியதே காதலுள்ளம்
------- சிறப்புடனே வாழ்ந்திடுமே !
வாசலிலே கோலமிட்டு
------ வாசமலர் சூடிக்கொண்டு
பாசமுடன் எழிலழகி
------ பாங்குடனே எதிர்பார்த்து
நேசமுடன் நேர்மையுடன்
------- நேரிழையாள் பண்ணிசைக்க
யாசகங்கள் பலசெய்வேன்
------- யாவிலுமே காதலொன்றே !
சித்தமது கலந்கிடுதே
------ சித்திரத்தைப் பாராயோ !
உத்தமனும் நீயன்றோ !
------ உணர்வாயோ என்நிலைமை !
பித்தாகி வீழ்கின்றேன்
------- பிசகிடுமா என்காதல் !
முத்தமழைப் பொழியாயோ !
-------- முத்தானத் தலைவன்நீ !
முழுமதியும் எனைக்கண்டு
-------- முகங்காட்டத் தவறிடுமே !
எழுகின்ற கதிரோனும்
------- எத்திக்கும் உன்நினைவால்
வழுவாத நீதியுமே
-------- வழுவிநின்றே தண்ணொளியை
விழுமிடுவான் ; மன்னவனே !
-------- விரைந்துநீயும் வந்திடுவாய் !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்