தம்பிக்கு சில அறிவுரைகள்

உன்னை நம்பிடு தம்பி
உன் உழைப்பை நம்பிடு
நன்றாய்ப் படித்திடு தம்பி
நாலையும் அறிந்திடு
நல்லவை யாது
தீயவை யாது
நல்லோர் யார் தீயோர் யார்
என்பதை நன்றே அறிந்திடு தம்பி
கற்கும் காலத்தில் வீணே
திரிந்து அலைந்திடாதே தம்பி
நல்லோர் சேர்க்கையில்
நல்லதை கற்றிடு தம்பி
தெய்வத்தை வணங்கிடு தம்பி
தந்தை தாயை வணங்கிடு தம்பி
நல் ஆசானை கண்டால்
அவன் தாள்கள் பணிந்திடு தம்பி
நாட்டிற்கு சேவை செய்ய
ஒரு நாளும் தயங்கிடாதே தம்பி
வீட்டைக் காக்கும் நீ
நாட்டையும் காத்திடவேண்டாமா தம்பி
தாய் நாட்டைக் காத்திட வேண்டாமா
வஞ்சனை செய்வாரோடு இணைந்திடாதே
வன்முறைக்கு எப்போதும் நீ கை கொடுத்திடாதே
உண்மை என்றும் உன்னைக் காக்கும் தம்பி
இதை உயிர் உள்ளவரை நீ மறந்திடாதே தம்பி
உன் காலில் நீ வாழ்ந்திட்டால் தம்பி
ஒரு நாளும் பிறர் காலை நீ வாரமாட்டாய்
நல்லவர் தான் நாட்டை ஆளவேண்டும் தம்பி
ராமன் ஆண்டாள் என்ன இராவணன் ஆண்டாள் என்ன என்று
ஒரு நாளும் நீ நினைத்துவிடாதே தம்பி
தாய் தந்தையை மறந்திடாதே தம்பி
தாய் நாட்டை மறந்திடாதே தம்பி
தாய் மொழியும் உனக்கு தாய் தான்
ஆக தாய் மொழியையும் பேணி
வளர்த்திடுவாய் தம்பி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Feb-17, 10:35 pm)
பார்வை : 108

மேலே