குழந்தையின் எதிர்காலம் - வெண்கலிப்பா - மரபு கவிதை

தெருவினிலே குழந்தையுடன் தேடுகின்றாள் மானிடரை
உருக்குலையும் நெஞ்சமோடு உருவாகும் என்வரிகள்
மருவாகிப் போனதுவே மலர்ச்சியில்லை வாழ்வினிலே
கருவான மழலையுடன் காண்.


காண்பீரோ அவலநிலை கண்ணீரும் கவிசொல்லும்
மாண்புடைய மக்களினம் மங்கியதோ மனிதநேயம்
ஆண்டவனும் தந்திட்ட அன்பான உயிர்களெல்லாம்
தீண்டுவாரும் ஏதுமில்லை தீர்ப்பு .


தீர்ப்புகளும் வழங்குகின்ற திறமையான நீதிமன்றம்
பார்ப்பாரோ இவர்களையும் பாரினிலே மிகக்கொடுமை
வார்ப்புகளும் கொண்டுள்ள வகையான உருவங்கள்
தேர்கொண்டு போகிறதோ தேடு .


தேடுகின்றேன் எதிர்காலம் தேகமுமே வாடிடவும்
பாடுகின்றேன் மௌனராகம் பலர்நோக்கப் பார்க்கின்றேன்
ஓடுகின்றேன் இவ்வுலகில் ஓய்ந்திடவும் மனமில்லை
வாடுகின்றேன் வாசமிலா வாழ்வு .


வாழ்வினிலே சுகமில்லை வருத்தமுடன் சொல்லுகின்றேன்
ஏழ்மையாகப் பிறந்ததுவே என்குற்றம் என்பதுபோல்
கீழ்நோக்கிப் பார்க்கின்றார் கீழ்சாதி என்கின்றார்
பாழ்பட்ட என்நிலைமை பார் .


பாரினிலே உள்ளவரே பாசமுடன் நோக்குங்கள்
மாரியதும் பெய்திடுமே மறக்காதீர் மனிதநேயம்
காரியங்கள் செய்யுங்கள் கருணையுடன் கொடைப்பண்பை
ஊரினிலும் உலகினிலும் ஊன்று .


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Feb-17, 12:01 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 55

மேலே