வாழ்வின் எண்ணங்கள் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் - மரபு கவிதை
வாழ்வினிலே வண்ணங்கள் பல்லாயிரம்
------ வளமான வாழ்க்கைக்கே உழைப்புதானே
தாழ்வில்லா வாழ்விற்கு நாளும்நாம்
------- தரணியிலே போராடல் நன்றேயாம் .
ஊழ்வினைகள் மாறிடவும் எல்லோருமே
------ உழைப்பீரே நிலம்நோக்கிச் செல்வீரே
பாழ்பட்டுப் போகாது காத்திடுதல்
------- பருவத்தே பலன்கொடுக்கும் அறிவீரே !
வண்ணங்கள் அனைத்துமே செந்நிறமே
------- வறுமையின் பாற்பட்டால் நிலைதானே
எண்ணங்கள் நன்னெறியை நாடிடுதல்
------ எம்மருங்கும் பசுமையினை உருவாக்கல்
கண்களுக்கு விருந்தாகிக் காட்சிதரும்
------ காலத்தால் அழிக்காதீர் பயிர்களையும் .
மண்மீதில் வயல்வெளிகள் பெருகிநின்றால்
------- மக்களினம் தழைத்தோங்கும் உண்மையன்றோ !
ஒற்றுமையாய் கூடிநின்று விளைநிலத்தில்
----- ஒன்றுபட்டுப் பாடுபடல் வேண்டுமன்றோ
பற்றுடனே மழைநீரைச் சேமித்தலும்
------ பயிர்களுக்கே உயிராகும் தெளிவீரே .
மற்றைவழிச் செல்வங்கள் காலத்தால்
------- மரித்தும்தான் போவதற்கு வாய்ப்புண்டாம்
சற்றேனும் சிந்திப்பீர் மானிடரே
------ சமுதாயம் வாழவேண்டின் உழைப்பீரே !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
முகவரி :- 50 , சேதுராமன் பிள்ளை காலனி
டிவிஎஸ் . டோல்கேட் ,
திருச்சி - 20