கரகாட்டக்காரன் என்றொரு சினிமா
சற்று நேரத்தில் ஆரம்பித்து விடும்
ஆவல் அதிகமாக
ஆசை பேராசையாகியிருந்தது...
வசதியான இடமென்று
ஜன்னல் ஒட்டிய மூலையில்
ஒட்டிக் கொண்டேன்...
ராமராஜன் வந்து போவதும்
கவுண்டமணி குரல் எழும்பி
அடங்குவதும்
பர்ர் என புள்ளிகள் நிரம்புதலுமாக
வண்ண நீள் கோடுகளோடு
டிவி எங்களின் கண்களை
அள்ளிக் கொள்ளக் காத்திருந்தது...
வாடகைக்கு டெக் எடுத்து
படம் காட்ட இருக்கும் வீட்டுக்காரர்
காசு வசூலிக்கத் தொடங்கியிருந்தார்...
என் முறை வந்த போது
வெறுங்கையோடு விழித்தேன்...
கை முழுக்க கட்டணம் அப்பி
வீட்டுக்கு வெளியே
கொண்டு வந்து விட்டார்...
பின், படம் ஆரம்பித்தது
சாத்திய கதவருகே
தனித்த கால்களால்
சற்று நேரம் நின்றிருந்தேன்...
கதவு தாண்டி டிவி தெரியாதா என்ற
ஏக்கம் என் முழுவதும் நிறைந்திருக்க
அழுகை அடக்க முடியவில்லை...
சத்தம் இல்லாமல் அழுது முடித்த போது
"இந்தப் படம் நல்லா இருக்காது"
என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு
நகர ஆரம்பித்தேன்...
25 வருடங்கள் ஓடி விட்டன...
ஏனோ இன்று வரை
பார்க்கவே தோன்றவில்லை
நீங்கள் எத்தனையோ முறை
பார்த்து ரசித்த
அதே கரகாட்டக்காரன் படத்தை......
கவிஜி